

மும்பை:
2016-ம் ஆண்டு நவம்பர் 6-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி ரூ.500, ரூ.1000 மதிப்பிலான நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். புதிய 500 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. இதே போல ரூ.2000 புதிய நோட்டுகளையும் மத்திய அரசு வெளியிட்டது. இதில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் இருப்பதால் 2000 ரூபாய் நோட்டில் கள்ள நோட்டு அச்சடிக்க இயலாது என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட 2000 ரூபாய் கள்ள நோட்டுகள் துபாய் வழியாக இந்தியாவில் புழக்கத்தில் விட திட்டமிடப்பட்டது. சரியான நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
துபாயில் இருந்து மும்பை வந்த விமானத்தில் ஒருவர் 2000 ரூபாய் கள்ள நோட்டுகளை வைத்து இருந்தது தெரிய வந்தது.
விமானத்தில் இருந்த வெளியே வந்த வாலிபர் சோதனை முடிந்து வெளியே சென்றார். சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள பஸ் நிலையத்துக்கு சென்றார். அப்போது அங்கு நின்ற போலீசார் அவரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தினர்.
போலீசார் நடத்திய விசாரணையில் அவரது பெயர் ஜாவித்ஷேக் (வயது 36). என்பதும், மராட்டிய மாநிலம் கல்வா பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட 2000 ரூபாய் கள்ள நோட்டுகளை துபாயில் இருந்து கொண்டு வருவதாக ஜாவித்ஷேக் போலீசாரிடம் தெரிவித்தார்.
அவரிடம் இருந்து ரூ.24 லட்சம் மதிப்புள்ள 2000 ரூபாய் கள்ள நோட்டுகள் கைப்பற்றப்பட்டன.
ஒரிஜினல் 2000 ரூபாய் நோட்டில் பாதுகாப்புக்காக 9 அம்சங்கள் இருக்கும். பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட அந்த கள்ள நோட்டில் 7 அம்சங்கள் இருந்தன. அதாவது ஒரிஜினல் நோட்டுகள் போல அந்த கள்ள நோட்டுகள் இருந்தன. சாதாரண நபருக்கு அது கள்ள நோட்டு என்று கண்டுபிடிப்பது கடினம்.
இந்த வகையான 2000 ரூபாய் கள்ள நோட்டுகள் துபாய், பாங்காக், வழியாக இந்தியாவில் புழக்கத்தில் விடப்படுகிறது. 2000 ரூபாய் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் வருவதால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ரிசர்வ் வங்கி இந்த நோட்டுகள் அச்சடிப்பதை நிறுத்தி வைத்து இருந்தது.
பிடிபட்ட கள்ள நோட்டுகளை தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.