மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு சுவிஸ் வங்கியில் அதிகரித்த இந்தியர்களின் பணம்

சுவிச்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கியில் இந்தியர்கள் டெபாசிட் செய்துள்ள தொகை கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு சுவிஸ் வங்கியில் அதிகரித்த இந்தியர்களின் பணம்
Published on

ஜுரிச்:

இந்திய அரசியல் புள்ளிகள், தொழிலதிபர்கள் சுவிச்சர்லாந்து உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் பணம் டெபாசிட் செய்துள்ளதாக கூறப்பட்டது. கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் கருப்புப்பண விவகாரம் புயலாக வீசிய நிலையில், மோடி பல வாக்குறுதிகளுடன் ஆட்சியை பிடித்தார்.

பிரதமரானதும் கருப்புப்பணத்தை மீட்கும் நடவடிக்கையாக தனி குழு அமைத்தார். ஆனால், அதன் பின்னர், அந்த வேலையில் எந்த முன்னேற்றமும் நடந்ததாக தெரியவில்லை. இந்நிலையில், சுவிச்சர்லாந்தில் உள்ள நேஷனல் வங்கி இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் டெபாசிட் செய்துள்ள பணம் குறித்தான தகவல்களை வெளியிட்டது. 

கடந்த 2016-ம் ஆண்டை விட இந்தியர்களின் பணம் 50 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இது, கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாகும். அதாவது, 1.01 பில்லியன் சுவிஸ் பிராங்குகள், இந்திய மதிப்பில் சுமார் ரூ.7,000 கோடிகளுக்கும் மேல் இந்தியர்கள் டெபாசிட் செய்துள்ளனர்.

ஆண்டு வாரியான தரவுகளின் படி 2017-ல் மொத்தமாக வெளிநாட்டு வாடிக்கையாளர்களின் பணம் 3 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதாவது 2017-ம் ஆண்டில் மட்டும் 1.46 ட்ரில்லியன் இந்திய மதிப்பில் சுமார் 100 லட்சம் கோடி டெபாசிட் ஆகியுள்ளது.

கடந்த 2016-ல் அதற்கு முந்தைய ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியர்களின் டெபாசிட் 45 சதவிகிதம் சரிவு கண்டது. ஆனால், இந்த ஆண்டு நேர்மாறாக டெபாசிட் 50 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டின் தரவுகளின் படி நேரடியாக இந்தியர்கள் சுவிஸ் வங்கியில் வைத்திருக்கும் தொகை சுமார் ரூ.6,891 கோடியாகும். 2006-ம் ஆண்டு இறுதியில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருந்த தொகை மட்டும் ரூ.23 ஆயிரம் கோடியாக இருந்தது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் இது 10-ல் ஒரு பங்கு குறைந்தது. 

இந்தச் சாதனை அளவுக்குப் பிறகு சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் பணம் அதிகரித்திருப்பது இது மூன்றாவது முறையாகும். 2011-ல் 12 சதவிகிதம், 2013-ல் 43 சதவிகிதம் தற்போது 2017-ல் 50.2 சதவிகிதம் அதிகரித்தது. அதாவது, 2004-ல் 56 சதவிகித அதிகரிப்புக்குப் பிறகு தற்போது 2017-ல் 50 சதவிகிதத்துக்கும் சற்று கூடுதலாக இந்தியர்களின் பணம் சுவிஸ் வங்கி இருப்பில் அதிகரித்துள்ளது.

கருப்புப்பணத்திற்கு எதிராக பல்வேறு நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசு கூறி வரும் நிலையில், சுவிஸ் வங்கியின் இந்த தரவுகள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com