

பாகிஸ்தானுக்கு வரும் சீக்கிய யாத்ரீகர்களுக்கு விமான நிலையத்தில் விசா வழங்கும் திட்டத்தை அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் இன்று அறிவித்தார்.
பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூரில் 500 ஆண்டுகள் பழமையான குருத்வாரா உள்ளது. அங்கு சீக்கியர்கள் புனித பயணம் செல்வது வழக்கம். அதற்காக, அங்கிருந்து இந்தியாவில் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தேரா பாபா நானக் ஆலயம் வரை பாதை அமைக்க இந்தியாவும், பாகிஸ்தானும் முடிவு செய்தன. அதன்படி, இரு நாடுகளும் அவரவர் பகுதியில் பாதை அமைத்துள்ளன.
கர்தார்பூர் பாதை வழியாக இந்தியாவில் இருந்து வரும் பக்தர்களுக்கு விசா அளிக்கும் நடைமுறைகள் இம்மாதம் 30-ம் தேதிக்குள் முடிவடையும் என பாகிஸ்தான் அரசு முன்னர் அறிவித்திருந்தது. அன்றாடம் 5 ஆயிரம் இந்திய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், லாகூர் மாகாண கவர்னர் மாளிகையில் சீக்கியர்கள் நடத்திய கருத்தரங்கில் பங்கேற்ற
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், தரிசனத்துக்காக பாகிஸ்தானுக்கு வரும் சீக்கிய யாத்ரீகர்களுக்கு விமான நிலையத்தில் விசா வழங்கும் திட்டத்தை இன்று அறிவித்துள்ளார்.
பஞ்சாப் மாகாண கவர்னர் சவுத்ரி சார்வார், மத்திய மந்திரிகள் பிரிட்டன், அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய யூனியன் மற்றும் பிறநாடுகளில் வசிக்கும் சீக்கிய மக்களின் பிரதிநிதிகள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் பேசிய இம்ரான் கான் கூறியதாவது:-
இஸ்லாமிய மக்களுக்கு மக்கா மற்றும் மதீனா புனிதத்தலங்களாக இருப்பதைப்போல் சீக்கிய மக்களுக்கு மதினாவாக கர்தார்பூரும் மக்காவாக நான்கானா சாகிபும் உள்ளது. இங்கு நடைபெறும் விழாக்களுக்கு வரும் சீக்கிய மக்களுக்கு இனி அவர்கள் பாகிஸ்தான் வந்து சேர்ந்ததும் விசா அளிக்கப்படும்.
இந்த நடைமுறையில் ஆரம்பத்தில் சில பின்னடைவுகள் இருந்தாலும் நாளடைவில் இது வெற்றிகரமாக நிறைவேற்றப்படும். இது சீக்கியர்களுக்கு பாகிஸ்தான் அரசு செய்யும் சலுகையல்ல, இது எங்கள் கடைமையுமாகும். நீங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் இங்கு வந்து செல்லலாம்.