அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய இம்ரான்கானுக்கு சிறப்பான வரவேற்பு

அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய இம்ரான்கானுக்கு இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்
Published on

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றிருந்தார். அங்கு ஜனாதிபதி டிரம்ப், வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து விட்டு நாடு திரும்பினார். நேற்று அதிகாலையில் இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் வந்திறங்கிய அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இம்ரான்கானின் ஆதரவாளர்கள் அதிக எண்ணிக்கையில் குவிந்து அவரை வாழ்த்தி கோஷங்களை எழுப்பினர்.

இந்த சிறப்பான வரவேற்பால் நெகிழ்ந்து போன இம்ரான்கான் தனது ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘நீங்கள் அளிக்கும் வரவேற்பை பார்த்தபோது, நான் அரசுமுறை பயணத்தை முடித்து வந்தது போல தெரியவில்லை. மாறாக நாட்டுக்காக உலக கோப்பையை வென்று வந்தது போல இருக்கிறது. பாகிஸ்தானை கொள்ளையடிக்க நினைத்தவர்களால் சீரழிக்கப்பட்ட ஒவ்வொரு நிறுவனங்களையும் நாம் சீரமைக்க வேண்டும். அவர்கள் கொள்ளையடித்து வெளிநாடுகளில் சேமித்து வைத்திருக்கும் சொத்துகளை பாகிஸ்தானுக்கே திரும்ப கொண்டு வர உதவி செய்யுமாறு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளை கேட்டுக்கொண்டு இருக்கிறேன்’ என்று தெரிவித்தார்.

முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான்கானின் தலைமையில்தான் பாகிஸ்தான் அணி கடந்த 1992-ம் ஆண்டு உலக கோப்பையை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com