

இஸ்லாமாபாத்:
லண்டனில் உள்ள சொத்துக்கள் தொடர்பான பார்க் லேன் வழக்கில் ஆசிப் அலி சர்தாரி கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பாகிஸ்தான் நாட்டின் முதல் பெண் பிரதம மந்திரி பெனாசிர் பூட்டோவின் கணவரும், அந்நாட்டு எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணைத் தலைவரும் ஆவார்.
போலி வங்கி கணக்குகள் மூலம் 15 கோடி ரூபாய் பரிவர்த்தனை செய்து பண மோசடி செய்த வழக்கில் தேசிய பொறுப்புடைமை நீதிமன்றம் இவரையும் இவரது சகோதரி ஃபரியால் தல்பூரையும் ஏற்கனவே சிறையில் அடைத்திருந்தது. இந்நிலையில் இன்று மீண்டும் பார்க் லேன் வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால ஜாமீன் மனுவை சர்தாரி வாபஸ் பெற்ற பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜாமீன் வழங்கப்பட்டால் தேசிய பொறுப்புடைமை நீதிமன்றம் மேலும் பல போலி வழக்குகளை தன்மீது தொடுக்கக்கூடும் என்பதால் மனுவை வாபஸ் பெற்றதாக சர்தாரி கூறினார்.
இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள சர்தாரி எதிர்க்கட்சித் தலைவர்களை இழிவுபடுத்த பாகிஸ்தானின் ஆளும் கட்சியான தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி செய்யும் முயற்சி என்றும் கூறியுள்ளார்.
2007 ல் பூட்டோ படுகொலை செய்யப்பட்ட பின்னர் சர்தாரி பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணைத் தலைவரானார் என்பது குறிப்பிடத்தக்கது.