அறந்தாங்கி அருகே ஈட்டியால் குத்தி பெயிண்டர் கொலை- அண்ணன் உள்பட 3 பேர் கைது

அறந்தாங்கி அருகே குடும்ப பிரச்சினையில் பெயிண்டர் ஈட்டியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவருடைய அண்ணன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கொலை
கொலை
Published on

அறந்தாங்கி:

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த கூகனூரை சேர்ந்தவர் பாலையா (வயது 45). இவருக்கு திருமணமாகி கலா என்ற மனைவியும், ஒரு மகள் மற்றும் ஒரு மகனும் உள்ளனர். பாலையா பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். பாலையாவிற்கும், அவருடைய அண்ணன் குடும்பத்தினருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பாலையா குடும்பத்துடன் தனது வீட்டில் இருந்தார். நள்ளிரவில் அவருடைய வீட்டிற்கு வந்த அவருடைய அண்ணன் சுப்பிரமணி (57), இவருடைய மகன் விக்னேஷ் (28), பாலையாவின் தம்பியினுடைய மருமகனான கொடிவேல் கிராமத்தை சேர்ந்த வீரமணி (30) ஆகியோர், பாலையாவிடம் குடும்ப பிரச்சினை தொடர்பாக தகராறில் ஈடுபட்டனர். தகராறு முற்றியதில் அவர்கள் ஈட்டியால் பாலையாவின் கழுத்தில் குத்தினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து பாலையாவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் குடும்ப பிரச்சினை காரணமாக பாலையா கொலை செய்யப்பட்டது, முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து பாலையாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணி, விக்னேஷ், வீரமணி ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com