திருக்குறுங்குடியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

களக்காடு யூனியனுக்குட்பட்ட அன்னதான சத்திரத்தில் அரசு கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. நேரடி கொள்முதல் நிலையத்தை நிரந்தர கொள்முதல் நிலையமாக மாற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெல் கொள்முதல்
நெல் கொள்முதல்
Published on

களக்காடு:

திருக்குறுங்குடி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஆண்டை விட இந்தாண்டு தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை பெய்ததால் இப்பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பளவில் நெல் மற்றும் வாழை சாகுபடி பணிகள் நடைபெற்றது. கார் பருவ சாகுபடியில் முந்திய நடுகை செய்த விவசாயிகள் தற்போது அறுவடை பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். விவசாயிகள் எதிர்பார்த்த அளவு நல்ல மேனியும் கிடைத்துள்ளது.

அம்பை16 (பருரக நெல்) அதிசய பொன்னி ஆந்திரா பொன்னி, (பொடிரக நெல்) இப்பகுதிகளில் அதிகமாக மகசூல் செய்யப்பட்டுள்ளது. தற்போது அறுவடை பணிகள் இப்பகுதிகளில் தீவிரமாக நடந்து வருகிறது. எந்திரம் மூலமாக அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. ஒரு மணி நேரத்திற்கு எந்திர வாடகை கடந்த ஆண்டு 2,200 ரூபாயாக இருந்தது. ஆனால் இந்தாண்டு 2,800 லிருந்து 3 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது.

இது விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பாகும். 150 கிலோ எடை கொண்ட பரு ரக நெல் ரகங்களை ரூ 2,200-க்கும், பொடி ரக நெல் ரகங்களை ரூ. 2 ஆயிரத்திற்கும் தனியார் வியாபாரிகள் வயல்களில் வந்தே எடுத்து செல்கின்றனர். இது மிகவும் குறைந்த விலையே ஆகும். இதனால் செலவழித்த தொகையை விட சொற்ப அளவே லாபம் கிடைக்கிறது. எனவே இப்பகுதியில் உள்ள விவசாயிகள் நலன் கருதி காலம் தாழ்த்தாமல் அரசு நெல் கொள்முதல் நிலையம் உடனடியாக திறக்க வேண்டுமென விவசாயிகள் மற்றும் விவசாய சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று களக்காடு யூனியனுக்குட்பட்ட அன்னதான சத்திரத்தில் அரசு கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் பெரும்படையார், நுகர்பொருள் வாணிப கழக ஊழியர் முத்துக்குமார் மற்றும் விவசாயிகள், விவசாய சங்கத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர். நேரடி கொள்முதல் நிலையத்தை நிரந்தர கொள்முதல் நிலையமாக மாற்ற வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் பெரும்படையார் கோரிக்கை விடுத்துள்ளார்.

இங்கு 100 கிலோ பெரிய ரக நெல் அரசின் ஊக்கத்தொகை சேர்த்து ரூ. 1,865-க்கும், சிறிய ரக நெல் ரூ. 1,905-க்கும் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கொள்முதல் நிலையத்திற்கு நெல்லை கொண்டு வரும் விவசாயிகள் பட்டா அடங்கல் நகல், ஆதார் கார்டு நகல், வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும் என்றும், அவர்களது வங்கி கணக்கில் 3 நாட்களில் நெல்லுக்குரிய பணம் செலுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com