பட்டினப்பாக்கம், சீனிவாசபுரத்தில் கடல் சீற்றத்தால் வீடுகள் இடிந்தன - பெண்கள், குழந்தைகள் தவிப்பு

பட்டினப்பாக்கம், சீனிவாசபுரத்தில் கடல் சீற்றத்தால் வீடுகள் இடிந்தன. இதனால் பெண்கள், குழந்தைகள் தவித்து வருகிறார்கள்.
பட்டினப்பாக்கம், சீனிவாசபுரத்தில் கடல் சீற்றத்தால் வீடுகள் இடிந்தன - பெண்கள், குழந்தைகள் தவிப்பு
Published on

சென்னை:

சென்னை, பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம் கடற்கரை பகுதியில் மீனவர்கள் குடியிருப்பு உள்ளது. அங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் தொழிலாளர்கள் வசிக்கின்றனர். கடந்த சில நாட்களாக இங்கு கடல் சீற்றம் காரணமாக கடற்கரையோர பகுதிகளில் மண்அரிப்பு ஏற்பட்டுள்ளது. கடல் சீற்றத்தால் 3 மீட்டர் உயரத்துக்கு கடல் அலைகள் எழுந்து சீறிப் பாய்ந்தன. இதனால் சுமார் 30 வீடுகள் இடிந்து சேதம் அடைந்தன. கடலோரத்தில் உள்ள ஒருசில தெருக்களிலும், வீடுகளிலும் தண்ணீர் புகுந்துள்ளது. பல வீடுகளில் உள்ள பொருட்களும் சேதம் அடைந்துள்ளன.

கடல் அலையால் இழுத்துவரப்பட்ட குப்பை கூளங்கள் வீடுகளுக்குள் சிதறிக்கிடக்கின்றன. எனவே அப்பகுதியில் வாழும் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள், குழந்தைகள் அச்சம் அடைந்துள்ளனர். சீனிவாசபுரத்தில் ஒருசில வீடுகள் முற்றிலுமாகவும், பெரும்பலான வீடுகளில் சுவர்களும் இடிந்து விழுந்துள்ளன.

ஒரு சில வீடுகளின் கூரைகள் அந்தரத்தில் தொங்குவதையும் காணமுடிகிறது. சில வீட்டு மேற்கூரைகள் அலையால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளன. இதனால் அந்த வீடுகளில் வசித்துவந்த மீனவர்கள் மற்றும் கூலி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அதில் வசித்தவர்கள் குழந்தைகளுடன் எங்கு சென்று தங்குவது என தெரியாமல் தவித்து வருகின்றனர். தற்காலிகமாக தங்குவதற்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். எண்ணூர் பகுதியிலும் கடல் சீற்றமாக காணப்பட்டுள்ளது. இப்பகுதியில் வசிப்பவர்களும் பாதுகாப்பான பகுதிகளுக்கு சென்றுள்ளனர்.

கடல் சீற்றம் குறித்து வானிலை மைய அதிகாரி கூறும்போது, ‘தென்மேற்கு பருவமழை காரணமாக மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் கடலோர பகுதிகளில் வசிப்பவர்களுக்கு கடல் சீற்றம் குறித்து எந்தவித எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. அமாவாசை நாட்களில் கடல் சீற்றம் இருப்பது இயற்கை தான்’ என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com