

இந்தியா உள்பட 6 நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாய், அபுதாபியில் நடைபெற்று வருகிறது.
அபுதாபியில் நேற்று நடந்த 3-வது ‘லீக்’ ஆட்டத்தில் இலங்கை அணி 91 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானிடம் தோற்று போட்டியில் இருந்து வெளியேறியது.
இது குறித்து இலங்கை அணியின் கேப்டன் மேத்யூஸ் கூறியதாவது:-
ஆசிய கோப்பை போட்டியின் தொடக்கத்திலேயே வெளியேறியது மிகப்பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது. அணியின் ஒட்டுமொத்த செயல்பாடு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முதல் ஆட்டத்தில் 150 ரன்னுக்கு குறைவாக எடுத்தோம். இந்த ஆட்டத்தில் 158 ரன் வரை தான் எடுத்தோம். ஆப்கானிஸ்தான் மிகவும் அபாரமாக விளையாடி எங்களை வெளியேற்றி விட்டது. அவர்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
எங்கள் அணி வீரர்களுக்கு நெருக்கடியை எப்படி சமாளிப்பது என்பது தெரியவில்லை. இரண்டு ஆட்டத்திலும் 160 ரன் கூட எடுக்க முடியாமல் போனது வருத்தத்தை ஏற்படுத்தியது.
இவ்வாறு அவர் கூறினார்.
வெற்றி குறித்து ஆப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கர் ஆப்கான் கூறும்போது, ‘ஒவ்வொரு பேட்ஸ்மேன்களும் திட்டமிட்டு விளையாடினார்கள். அனைத்து துறையிலும் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களுக்கு ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.