

ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் தலைவர்கள் உச்சகட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. காசிமேட்டில் இன்று நடந்த தி.மு.க. பிரச்சாரக் கூட்டத்தில் வேட்பாளர் மருது கணேஷை ஆதரித்து கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அவர் பேசியதாவது:-
தமிழகத்தின் உரிமைகள் இப்போது பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தின் சுயமரியாதைக்கு பங்கம் விளைவிக்கும் இந்த ஆட்சிக்கு முடிவு கட்டும் தருணம் வந்துவிட்டது. இந்த ஆட்சிக்கு முடிவு கட்டவேண்டும் என்ற உணர்வோடு பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் எல்லாம் ஒருங்கிணைந்து ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். கடந்த காலங்களில் இருந்த கருத்து வேறுபாடுகளை மறந்து தமிழகத்தை காப்பாற்ற பல்வேறு கட்சிகள் ஒன்று சேர்ந்திருப்பதை வரவேற்கிறேன். இந்த ஒற்றுமை தொடர வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்.
75 நாட்கள் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த தகவலை மூடி மறைத்தவர்கள் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ். மற்றும் சசிகலா என்ற மூன்று குழல் துப்பாக்கி.
ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து பொய்யான தகவல்களைப் பரப்பியவர்கள்தான் இங்கு போட்டியிடுகிறார்கள். ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை மறைத்தவர்களில் முக்கிய பங்கு வகித்தவர்கள் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்.
ஜெயலலிதா மறைந்த பின்னர் முதல்வராகப் பதவியேற்ற ஓபிஎஸ், அவர் 65 நாட்கள் முதல்வராக இருந்தபோது ஒரு முறையாவது ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருந்ததாக கூறவில்லை. ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு ஆறுமுகச்சாமி விசாரணை ஆணையம் அமைத்திருப்பது கண்துடைப்பு நடவடிக்கை.