

ஊத்துக்கோட்டை:
சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி ஏரிக்கு ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா கால்வாய் வழியாக தண்ணீர் வருகிறது.
கடந்த டிசம்பர் மாதம் 27-ந்தேதி முதல் கண்டலேறு அணையில் இருந்து 2450 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. பூண்டி ஏரிக்கு இது வரும்போது 500 கன அடி அளவுக்கு கிடைத்தது.
அதன் பிறகு படிப்படியாக கண்டலேறு அணையில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டு வந்தது.
நேற்று முன்தினம் 1650 கன அடியாக குறைக்கப்பட்டது. இன்று 1555 கன அடிதான் திறந்து விடப்பட்டுள்ளது.
68 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட கண்டலேறு அணையில் இப்போது 8.24 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே உள்ளதால் பூண்டி ஏரிக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு மேலும் குறைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆண்டுதோறும் கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும். ஆனால் இதுவரை 1.858 டி.எம்.சி. தண்ணீர் தான் பூண்டி ஏரிக்கு கிடைத்துள்ளது.
கோடைகாலம் தொடங்கி விட்டதால் ஆந்திர மாநிலத்துக்கு தண்ணீர் தேவை என்பதால் தமிழகத்துக்கு திறக்கப்படும் தண்ணீர் அளவு இன்னும் குறையும் என்று அதிகாரிகள் கூறினார்கள்.
ஆண்டுக்கு 12 டி.எம்.சி. தண்ணீர், கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தப்படி தமிழகத்துக்கு கிடைக்க வேண்டும். ஆனால் 96-ம் ஆண்டு முதல் இதுவரை முழுமையாக தண்ணீர் பூண்டிக்கு வந்தது கிடையாது. இந்த ஆண்டும் பாதி அளவு தண்ணீர்தான் கிடைத்துள்ளது. #tamilnews