5 மாதங்களுக்கு பிறகு வழிபாட்டு தலங்கள் திறப்பு

தர்மபுரி மாவட்டத்தில் 5 மாதங்களுக்கு பிறகு வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

தர்மபுரி:

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன்காரணமாக தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டன. கோவில்களில் ஆகமவிதிகளின்படி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

இந்த நிலையில் தமிழக அரசு உத்தரவுப்படி இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் நேற்று முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு நடை திறக்கப்பட்டது. இதையொட்டி அனைத்து கோவில்களிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப்பணி நடைபெற்றது. கோவில்களுக்கு சென்ற பக்தர்கள் கை, கால்களை கழுவியபின் கைகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்ட பின்னரே கோவில்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். கோவில்களில் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது.

கொரோனா ஊரடங்கை தொடர்ந்து 5 மாதங்களுக்கு பிறகு கோவில்களில் சாமி தரிசனம் செய்ய நேற்று முதல் அனுமதி வழங்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தர்மபுரி நகரில் உள்ள கோட்டை மல்லிகார்ஜூனசாமி கோவில், குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிசாமி கோவில், நெசவாளர் நகர் மகாலிங்கேஸ்வரர் கோவில், அன்னசாகரம் சிவசுப்பிரமணியசாமி கோவில், அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர் கோவில், தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில். பென்னாகரம் நரசிம்ம சாமி கோவில், ஒகேனக்கல் தேசநாதேஸ்வரர் கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டு நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com