

கோவை:
கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த குழந்தைகளை மிஸ்-சி (மல்டிசிஸ்டம் இன்பிளமேட்டரி சின்ட்ரோம் இன் சில்ரன்) என்ற புதிய வைரஸ் தொற்று தாக்குவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தைகள் பாதுகாப்பு நிறுவனம் சுகாதாரத்துறைக்கு அறிவுறுத்தியது. இதைத்தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வில் சென்னை, மதுரையில் பல்வேறு குழந்தைகள் மிஸ்-சி வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருந்தது தெரியவந்தது.
இந்தநிலையில் கோவை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 2 வாரத்தில் மட்டும் மிஸ்-சி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு திருப்பூரை சேர்ந்த ஒரு வயது குழந்தை உள்பட 3 குழந்தைகள், கோவையை சேர்ந்த 4 குழந்தைகள் என்று 7 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.
இவர்களில் திருப்பூரை சேர்ந்த ஒரு வயது குழந்தை மிஸ்-சி வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பலனின்றி கடந்த 2 நாட்களுக்கு முன்பு உயிரிழந்தது. கோவை அரசு ஆஸ்பத்திரியில் மிஸ்-சி வைரஸ் தொற்றுக்கு ஒரு வயது குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.