

கோவை:
கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் (வயது 36) கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந் தேதி படுகொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். சம்பவத்தன்று காந்திபுரத்தில் இருந்து சசிகுமார் வீட்டுக்கு ஸ்கூட்டரில் சென்ற போது ஒரு கும்பல் மோட்டார் சைக்கிள்களில் பின்தொடர்ந்து சென்று வெட்டிக் கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த வீடியோ காட்சிகளை சேகரித்து விசாரணை நடந்தது.
இந்த வழக்கில் சாய் பாபாகாலனியை சேர்ந்த சதாம் உசேன்(வயது 25) என்பவரை கடந்த ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் இவ்வழக்கு தொடர்பாக பல்வேறு தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தது.
இந்த வழக்கில் சாய்பாபா காலனியை சேர்ந்த முபாரக் (37) என்பவர் மூளையாக செயல்பட்டதாகவும், அவருடன் மேலும் 2 பேர் சேர்ந்து சசிகுமாரை வெட்டியதாகவும் சதாம்உசேன் கூறினார். முபாரக்குடன் வந்த 2 பேர் யார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக தெற்குஉக்கடம் கோட்டைபுதூரை சேர்ந்த சுபைர்(33) என்பவரை சி.பி. சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
அவரை போலீஸ் பயிற்சி மைதானத்தில் உள்ள சிறப்பு புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-
சசிகுமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சதாம் அளித்த தகவல்களின் அடிப்படையில் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தோம்.
முபாரக் குடன் வந்த 2 பேர் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் சுபைர் மற்றும் தெற்கு உக்கடத்தை சேர்ந்த மேலும் ஒரு வாலிபர் என்பது தெரிய வந்தது. சதாம் கைது செய்யப்பட்ட பின்னர் சுபைரும் தலைமறைவானார். இது அவர் மீதான சந்தேகத்தை அதிகரித்தது. அவரை தீவிரமாக தேடி வந்தோம். இந்நிலையில் சுபைர் குடும்பத்தினரை பார்ப்பதற்காக கோவை வந்திருப்பது தெரிய வந்தது. அவர் கிணத்துக்கடவு அருகே வந்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.
சுபைர் பாலக்காட்டில் பதுங்கி இருந்துள்ளார். கொலைக்கான காரணம் மற்றும் தலைமறைவாக உள்ள முபாரக் பற்றி அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
இதில் மேலும் பல தகவல்கள் கிடைத்துள்ளது. இன்று மாலை சுபைர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார்.
இவ்வாறு போலீசார் கூறினர்.
இந்த கொலை தொடர்பாக சாய்பாபாகாலனி கே.கே. புதூரை சேர்ந்த அபுதாகீர்(30) என்பவரை கடந்த மார்ச் மாதம் போலீசார் கைது செய்தனர். அவர் தற்போது ஜாமீனில் வெளியாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.