

சென்னை:
தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணிக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தேர்வு நடந்தது. இந்த தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர் செயலர் உமா சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் கொடுத்த புகாரின் பேரில் ‘சைபர் கிரைம்’ பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.இந்த முறைகேடு வழக்கில் சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியை சேர்ந்த கணேசன்(வயது38), கொளத்தூரை சேர்ந்த ரகுபதி(34) உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட மதுரவாயலை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஷேக் தாவூத் நாசர்(32) பொன்னேரி நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய திருச்சி வயலூரை சேர்ந்த தினேஷ்(26) என்பவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். ஓட்டல் ஊழியரான தினேஷ் இடைத்தரகராக செயல்பட்டிருப்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட தினேஷ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் இதுவரையில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். #tamilnews