ஓணம் பண்டிகைக்காக ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் காய்கறி வரத்து அதிகரிப்பு

கேரளாவில் பிரசித்தி பெற்ற ஓணம் பண்டிகைக்காக ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் காய்கறி வரத்து அதிகரித்துள்ளது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

ஒட்டன்சத்திரம்:

ஓணம் பண்டிகைக்காக ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் சுமார் 1200 டன் காய்கறிகள் வந்து இறங்கியுள்ளது.

கேரளாவில் பிரசித்தி பெற்ற ஓணம் பண்டிகை வருகிற 31-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக அங்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக பொதுமக்கள் பாதுகாப்புடன் ஓணம் பண்டிகையை கொண்டாடுமாறு அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

இருந்த போதும் பண்டிகைக்காக வீடுகள் மற்றும் கோவில்கள் முன்பு அத்தப்பூக் கோலம் வரைந்து விதவிதமான உணவுகள் தயார் செய்து அதனை அனைவருக்கும் வழங்கி உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம்.

இதற்காக ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் வழக்கத்துக்கு அதிகமாக ஏராளமான கய்கறிகள் வந்து இறங்கியுள்ளது. கேரள மாநிலத்தில் சுமார் 70 சதவீத காய்கறி தேவையை ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டே பூர்த்தி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஓணம் பண்டிகைக்காக கத்தரி, வெண்டைக்காய், முருங்கை, பீன்ஸ், பூசணி, இளவன், மத்தன், பச்சை மிளகாய், பீட்ரூட், வாழைக்காய், வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் அதிக அளவில் வந்து இறங்கியுள்ளன. சாதாரணமாக 600 முதல் 700 டன் காய்கறிகள் வந்த நிலையில் நேற்று இரவு 1200 டன் வரை காய்கறிகள் வந்து இறங்கியுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக ஒட்டன்சத்திரத்தில் 4 இடங்களில் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. தற்போது காந்தி மார்க்கெட் மற்றும் காமராஜர் மார்க்கெட்டுகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் ஏற்றப்பட்டு கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

இன்றும் நாளையும், இதே அளவுக்கு காய்கறிகள் கேரளாவுக்கு செல்ல ஆர்டர்கள் உள்ளதால் வியாபாரிகள் மற்றும் மார்க்கெட் ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சனிக்கிழமை மார்க்கெட் விடுமுறை என்பதாலும் ஞாயிற்றுக்கிழமை தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு என்பதாலும் இன்றும் நாளையும் ஒட்டன்சத்திரம் மார்கெட்டில் விற்பனை விறு விறுப்பாக நடைபெறும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com