உளுந்தூர்பேட்டையில் 4 ஆம்னி பஸ்கள் ஒன்றோடு ஒன்று மோதல்- 40 பேர் படுகாயம்

உளுந்தூர்பேட்டையில் இன்று அதிகாலை 4 ஆம்னி பஸ்சுகளும் அடுத்தடுத்து மோதிக் கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உளுந்தூர்பேட்டையில் 4 ஆம்னி பஸ்கள் ஒன்றோடு ஒன்று மோதல்- 40 பேர் படுகாயம்
Published on

உளுந்தூர்பேட்டை:

நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் இருந்தும், நெல்லையில் இருந்தும் நேற்று மாலை 2 ஆம்னி பஸ்கள் சென்னையை நோக்கி புறப்பட்டு சென்றது.

அதேபோல் கொடைக்கானலில் இருந்தும், உடன்குடியில் இருந்தும் 2 ஆம்னி பஸ்கள் சென்னைக்கு நேற்று மாலை புறப்பட்டது. இன்று அதிகாலை 4 மணியளவில் இந்த 4 ஆம்னி பஸ்களும் உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தது.

ஆலங்குளத்தில் இருந்து சென்னைக்கு சென்ற ஆம்னி பஸ் மீது நெல்லையில் இருந்து சென்ற ஆம்னி பஸ் மோதியது. அதன்பின்பு கொடைக்கானலில் இருந்தும் உடன்குடியில் இருந்து சென்னைக்கு சென்ற ஆம்னி பஸ்சும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டது.

இந்த விபத்தில் உடன்குடியில் இருந்து சென்ற பஸ்சும், கொடைக்கானலை சேர்ந்த பஸ்சும் பலத்த சேதமடைந்தது. இந்த 2 பஸ்களிலும் இருந்த 40பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

படுகாயம் அடைந்தவர்களின் விவரம் வருமாறு:-

மருத்துவகல்லூரி மாணவி சுனிதா(21), செழின்(28), வீரராகவன்(40), சந்தானம்(42), மருத்துவகல்லூரி மாணவி மிருதுளா(22), அஜீத்போஸ்(29), பிரியா(38), குருபிரசாத்(37), சாதிக்பாஷா(39), கபாலி(24) உள்பட 40 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் உளுந்தூர்பேட்டை மற்றும் எடைக்கல் போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்த பயணிகளை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

4 ஆம்னி பஸ்சுகளும் அடுத்தடுத்து மோதிக் கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com