சைக்கிளில் சென்று கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் செய்யும் முதியவர்

கொரோனா தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முதியவர் ஒருவர் தமிழகம் முழுவதும் சைக்கிளில் பிரசாரம் செய்து வருகிறார்.
கோபால்சாமி
கோபால்சாமி
Published on

மதுரை:

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் பகுதியை சேர்ந்தவர் கோபால்சாமி(வயது 67). இவர் கொரோனா தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் சைக்கிளில் பிரசாரம் செய்து வருகிறார். அதன்படி கடந்த செப்டம்பர் மாதம் 30-ந்தேதி தனது சைக்கிள் பயணத்தை தொடங்கிய அவர் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களுக்கு சென்று விட்டு நேற்று மதுரை வந்தார்.

மதுரைக்கு வந்த அவரிடம் இதுகுறித்து கேட்டபோது, கொரோனாவால் உலகமே கஷ்டத்தில் இருக்கிறது. எனவே இந்த நோய் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த சைக்கிள் பிரசாரத்தை தொடங்கி இருக்கிறேன். சிவகாசியில் தொடங்கி குமரி சென்றேன். அதன்பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நெல்லை வழியாக மதுரைக்கு வந்திருக்கிறேன். செல்லும் இடங்களில் எல்லாம் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன்.

மதுரையில் இருந்து திருவண்ணாமலை வழியாக சென்னை சென்று முதல்-அமைச்சரை சந்தித்து ஏழை, எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் வழியாக கூடுதல் நிவாரண பொருட்கள் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்க இருக்கிறேன். அதன்பின்னர் அங்கிருந்து திருச்செந்தூர் வந்து என்னுடைய பயணத்தை முடித்து கொள்கிறேன் என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com