மனைவி பிரிந்து சென்றதால் மரத்தில் தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை

காயல்பட்டினத்தில் மனைவி பிரிந்து சென்றதால் மரத்தில் தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

ஆறுமுகநேரி:

காயல்பட்டினம் கீழலட்சுமி புரத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 70). இவரது மனைவி மூக்கம்மாள். இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். திருமணமாகி உள்ள மகன் காளிராஜன் உடன் மாரிமுத்து வசித்து வந்தார்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மூக்கம்மாள் தெர்மல் நகரில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் மாரிமுத்து மனம் உடைந்த சோகத்துடன் இருந்துள்ளார். தனது மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்றது அவருக்கு மன வருத்தத்தை அளித்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாரிமுத்து வீட்டை விட்டு சென்றவர் இரவு வீடு திரும்பவில்லை. உறவினர்கள் அவரை அக்கம்பக்கத்தில் தேடி விசாரித்த போதும் கண்டுபிடிக்க முடியவில்லை.

நேற்று காலையில் காயல்பட்டினம் ஓடைக்கரையை அடுத்து உள்ள திருச்செந்தூர் பனங்கற்கண்டு உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்திற்கு பாத்தியப்பட்ட பனங்காட்டு பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மாரிமுத்து பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காயல்பட்டினம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக காளிராஜன் கொடுத்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com