நோய் காலத்தில் 3 மாதம் வரை சம்பளம்: டிரைவர்களுக்கு  ‘ஓலா’ அளிக்கும் காப்பீட்டு திட்டம்

நோய் காலத்தில் 3 மாதம் வரை சம்பளம்: டிரைவர்களுக்கு ‘ஓலா’ அளிக்கும் காப்பீட்டு திட்டம்

நோய்வாய்ப்படும் டிரைவர்களுக்கு தொடர்ந்து மூன்று மாதம் வரை சம்பளம், பிள்ளைகளின் படிப்பு செலவுக்கு பணம் உள்ளிட்ட புதிய காப்பீட்டு திட்டத்தை ஓலா அறிமுகம் செய்துள்ளது.
Published on

புதுடெல்லி:

ஓலா கேப்ஸ் என்பது தனியார் போக்குவரத்து நிறுவனம் ஆகும். 2010-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பாவேசு அகர்வால் என்பவரால் துவங்கப்பட்டது. இந்நிறுவனம் முதன்முதலில் தொலை தொடர்பு மூலமாக மும்பையில் வாடிக்கையாளர்களுக்கு சேவையை வழங்கியது. இது படிப்படியாக உயர்ந்து மேலும் தனது சேவையை பெங்களூரிலும் தொடர்ந்தது. 2014-ம் ஆண்டு நவம்பரில் 100 நகரங்களில் 2,00,000 வாடகைக் கார்களைக் கொண்டு பெருகியுள்ளது. 

சொந்தமாக வாடகை கார், ஆட்டோ ஓட்டுபவர்கள் இந்நிறுவனத்தில் பதிவு செய்துகொண்டு அதன்மூலம் அதிகப்படியான லாபம் பெறலாம். இந்நிறுவனம் மூலம் இந்தியா முழுவதும் பல தனியார் வாடகை வாகன ஓட்டுநர்கள் பயனடைந்துள்ளனர். 

இந்நிலையில், ஓலா நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து ஓட்டுநர்களும் பயன்பெறும் வகையில் புதிய திட்டத்தை தொடங்க ஓலா நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி பஜாஜ் அலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து அனைத்து ஓலா ஓட்டுநர்களுக்கும் ‘சலோ பெபிகார்’ என்னும் பெயரில் புதிய காப்பீடு திட்டம் வழங்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஓலா நிறுவனத்தின் சி.இ.ஓ. விஷால் கவுல்

அந்த திட்டத்தின்படி ஓலா நிறுவனத்தில் பதிவு செய்து ஆயுள் காப்பீடு எடுக்கும் ஓட்டுநர்களின் குழந்தைகள் படிப்பு செலவுக்காக ஆண்டிற்கு அதிகபட்சமாக 24 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும். மேலும் ஓட்டுநர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வாகனம் ஓட்ட முடியாமல் போகும் பட்சத்தில் அவருக்கு நாள் ஒன்றுக்கு 750 ரூபாய் வீதம் முன்று மாதம் வரையில் வழங்கப்படும். இதுவும் ஆண்டிற்கு ஒரு முறை வழங்கப்படும். மேலும் விபத்து காப்பீடாக 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

இந்த திட்டத்தின் மூலம் ஓலா ஓட்டுநர் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிக பயன் பெறலாம் என ஓலா நிறுவனத்தின் சி.இ.ஓ. விஷால் கவுல் தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com