எண்ணெய் கப்பல் தீ விபத்து- ஊழியர்கள் இருந்த பகுதியில் தீயை அணைத்த கடலோர காவல் படை

இந்தியாவிற்கு வந்துகொண்டிருந்த எண்ணெய் கப்பலில் பிடித்த தீயை அணைக்கும் பணியில் கடலோர காவல் படையினர் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
தீப்பற்றி எரியும் கப்பல்
தீப்பற்றி எரியும் கப்பல்
Published on

புதுடெல்லி:

பனாமா நாட்டுக்கு சொந்தமான ‘நியூ டைமண்ட்’ கப்பல், குவைத்தில் இருந்து கச்சா எண்ணெயை ஏற்றிக்கொண்டு இந்தியாவுக்கு வந்து கொண்டிருந்தது. இந்த கப்பலில் மாலுமி, பொறியாளர்கள் என 23 ஊழியர்கள் இருந்தனர்.

இந்த கப்பல் நேற்று இலங்கையின் கிழக்கு கடற்பகுதியில் வந்தபோது அதன் என்ஜின் பகுதியில் திடீரென தீப்பிடித்தது. பின்னர் அது கப்பலின் பிற பகுதிகளுக்கும் பரவியது. இலங்கை கடற்படையின் 4 கப்பல்கள் மற்றும் இலங்கையின் ஹம்பன்தோட்டா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரஷியாவின் 2 போர் கப்பல்கள் சம்பவ இடத்துக்கு சென்று தீயணைப்பு பணிகளை மேற்கொண்டன.

கப்பலில் இருந்த ஊழியர்கள் 19 பேர் உயிர்காக்கும் படகுகள் மூலம் கப்பலில் இருந்து வெளியேறினர். அவர்களை இலங்கை கடற்படை கப்பல்கள் மீட்டன. மேலும் கப்பலில் இருந்த கேப்டன் உள்ளிட்ட 3 பேரும் பத்திரமாக உள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்து உள்ளது. மற்றொரு ஊழியரை காணவில்லை. அவரை தேடும் பணிகள் நடந்து வருகின்றன.

இதற்கிடையே  கப்பலில் பிடித்த தீயை அணைக்க இந்தியாவின் உதவியை இலங்கை நாடியது. எனவே இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான சவுரியா, சரங் மற்றும் சமுத்ரா ஆகிய 3 கப்பல்களை இந்தியா அனுப்பி வைத்தது. அத்துடன் டோர்னியர் விமானம் ஒன்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளுக்காக இலங்கைக்கு விரைந்தது.

இரண்டாவது நாளாக இன்றும் தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. கப்பலில் ஊழியர்கள் தங்கியிருந்த பகுதியில் பிடித்த தீயை இந்திய கடலோர காவல் படையின் தீயணைப்பு குழுவினர் விரைவாக அணைத்தனர். மற்ற பகுதியில் தீயை கட்டுப்படுத்தும் பணி நடைபெறுகிறது. ஏற்கனவே தீப்பிடித்த இடத்தில் மீண்டும் தீப்பற்றாமல் தவிர்ப்பதற்காக குளிரூட்டும் பணிகளையும் மேற்கொண்டுள்ளனர்.

தீ விபத்து ஏற்பட்ட கப்பல் தற்போது இலங்கையின் கிழக்கு கரையில் இருந்து 37 நாட்டிக்கல் மைல் தொலைவில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com