யானைகள் வழித்தடம் ஆக்கிரமிப்பு - மேலும் 10 ரிசார்ட்டுகளுக்கு சீல் வைக்க நடவடிக்கை

நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடத்தில் ஆக்கிரமித்து கட்டியிருந்த மேலும் 10 ரிசார்ட்டுகளுக்கு சீல் வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
யானைகள் வழித்தடம் ஆக்கிரமிப்பு - மேலும் 10 ரிசார்ட்டுகளுக்கு சீல் வைக்க நடவடிக்கை
Published on

காந்தல்:

நீலகிரி மாவட்டத்தில் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சீகூர், சிங்காரா மற்றும் முதுமலை வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளது.

யானைகளின் வழித் தடங்களான மசினகுடி, மாயார், மாவல்லா, வாழைத்தோட்டம், பொக்காபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 400-க்கும் மேற்பட்ட ஓட்டல்கள், ரிசார்ட்டுகள் உள்ளது. இவைகள் யானைகள் வழித்தடத்தை மறித்து கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக வக்கீல் யானை ராஜேந்திரன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனை தொடர்ந்து யானைகள் வழித்தடங்களை ஆக்கிரமித்து விடுதி மற்றும் ஓட்டல்கள் கட்டுவதற்கு கடந்த 2011-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டு தடை விதித்தது.

மேலும் யானை வழித்தடம் என வரையறுக்கப்பட்ட பகுதிகளில் இருந்து விவசாய நில உரிமையாளர்கள், விடுதி உரிமையாளர்கள் தங்கள் குடியிருப்புகளை காலி செய்து மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து பாதிக்கப்பட்ட விடுதி உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் என 50-க்கும் மேற்பட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்தனர்.

இந்த வழக்கு ஜூலை 12-ந்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் யானை வழித்தடம் குறித்த செயல் திட்டத்தை நீலகிரி மாவட்ட கலெக்டர் 4 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என கூறி இருந்தனர். அதன்படி கலெக்டர் தாக்கல் செய்த அறிக்கையில் யானைகள் வழித்தடங்களில் 39 ரிசார்ட்டுகள் இருப்பதாக கூறப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மதன் பி லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கலெக்டர் தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் 27 ரிசார்ட்டுகளுக்கு 48 மணி நேரத்தில் சீல் வைக்கவும், 12 ரிசார்ட் உரிமையாளர்கள் கலெக்டரிடம் 48 மணி நேரத்தில் ஆவணங்களை சமர்பிக்க அவகாசம் வழங்கியும் உத்தரவிட்டனர்.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து யானை வழித் தடங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 27 ரிசார்ட்டுகள் சீல் வைக்கப்பட்டது. கோர்ட்டு அவகாசம் வழங்கிய 12 ரிசார்ட் உரிமையாளர்கள் ஆவணங்களை கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவிடம் வழங்கினர். ஆவணங்களை கலெக்டர் ஆய்வு செய்த போது 10 ரிசார்ட்டுகளின் ஆவணங்கள் முறையாக இல்லை. எனவே இந்த 10 ரிசார்ட்டுகளை சீல் வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

மீதமுள்ள 2 ரிசார்ட்டுகளின் ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com