

கம்பம்:
தேனி மாவட்டம் கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் 248 பயனாளிகளுக்கு தமிழக அரசின் தாலிக்கு தங்கத்தை ஜக்கையன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
நிகழ்ச்சி முடிந்து எம்.எல்.ஏ. புறப்பட்டு சென்றதும் தங்கம் பெற்ற பயனாளிகளிடம் இருந்து அதிகாரிகள் அதனை திரும்ப பெற்றனர். இதனால் பயனாளிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இது குறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சிக்கு புதிய பயனாளிகள் வரவில்லை. அவர்களின் குடும்பத்தினர்தான் வந்தனர். இதனால் அதனை திரும்ப வாங்கிக் கொண்டோம். டோக்கனை உரிய பயனாளிகளிடம் கொடுத்து அனுப்பினால் தங்கத்தை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்தோம்.
இதனால் சிலர் எங்களிடம் பிரச்சனை செய்தனர். அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தோம் என்று தெரிவித்தனர். பொதுமக்கள் கூறுகையில், எந்த முன்னறிவிப்பும் எங்களிடம் சொல்லவில்லை. டோக்கன் கொண்டு வருபவர்களுக்கு தங்கம் தருவோம் என்றனர். ஆனால் திடீரென எம்.எல்.ஏ. வழங்கி சென்ற பிறகு அதனை திரும்ப பெற்றுக் கொண்டனர்.
இதனால் பல மணி நேரம் காத்திருந்து ஏமாந்து போய் விட்டோம் என்று விரக்தியுடன் கூறினர்.