

அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி. இவர் கல்லூரி மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசாரும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானமும் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த மாதம் 16-ந்தேதி நிர்மலாதேவி தொடர்பான விசாரணையை சந்தானம் தொடங்கினார். மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரை, பதிவாளர் சின்னையா மற்றும் பேராசிரியர்களை நேரில் வரவழைத்து விசாரணை நடத்திய சந்தானம், கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலாதேவி தொடர்பாக பல்வேறு கேள்விகளை கேட்டார். ஆனால் பல்கலைக்கழக அதிகாரிகள் இதுதொடர்பாக உறுதியான பதிலை சந்தானத்திடம் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் கடந்த 26-ந்தேதி மதுரை சிறைக்கு சென்ற சந்தானம் அங்கு நிர்மலாதேவியை நேரில் சந்தித்து சுமார் 8 மணி நேரம் விசாரணை நடத்தினார். அப்போது பல்வேறு தகவல்களை நிர்மலாதேவி சந்தானத்திடம் கூறியதாக தெரிகிறது. இதன் அடிப்படையில் மீண்டும் பல்கலைக்கழக அதிகாரிகளை நேரில் அழைத்து சந்தானம் விசாரித்தார். பதிவாளர் சின்னையாவிடம் சில ஆவணங்களையும் கேட்டு பெற்றார்.
இந்த நிலையில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரிடம் நேற்று சந்தானம் தீவிர விசாரணை நடத்தினார். நிர்மலாதேவியுடன் நெருங்கிய தொடர்புடையதாக கூறப்படும் இவர்களிடம் கடந்த சில ஆண்டுகளாக நிர்மலாதேவியின் நடவடிக்கைகள் குறித்து வாக்குமூலம் பெற்றார்.
மேலும் காமராஜர் பல்கலைக்கழகத்தில் நிர்மலாதேவியை சுதந்திரமாக அனுமதித்த உயர் அதிகாரிகள் யார்-யார்? என்ற விவரத்தையும் கேட்டறிந்தார்.
சந்தானம் குழு விசாரணைக்கு முருகன், கருப்பசாமி ஆகியோர் முழு ஒத்துழைப்பு கொடுத்தனர். நேற்று 8 மணி நேரம் விசாரணை நடத்திய சந்தானம் இன்று 2-வது நாளாக சிறைக்கு சென்று அவர்களிடம் விசாரணை நடத்துகிறார்.
முருகன், கருப்பசாமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நிர்மலாதேவி விவகாரத்தில் மேலும் 4 பேராசிரியர்களுக்கு தொடர்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது.
எனவே அவர்களிடமும் விசாரணை நடத்த சந்தானம் திட்டமிட்டுள்ளார். இன்று அல்லது நாளை பல்கலைக்கழக பேராசிரியர்களிடம் விசாரணை நடக்கிறது.
நிர்மலாதேவி விவகாரத்தில் நாளுக்கு நாள் புதுபுது தகவல்கள் வந்து கொண்டே இருப்பதாக சந்தானம் தெரிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக முகவரி இல்லாத பல கடிதங்கள் வந்துள்ளதாகவும் அதில் உண்மை தன்மை இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்களை அழைத்து விசாரணை நடத்துவோம் என்றும் சந்தானம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் உறுப்புக் கல்லூரியான மதுரை அழகர்கோவில் ரோட்டில் உள்ள பல்கலைக்கழக கல்லூரியில் ஆங்கிலத் துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றும் மோகனிடம் அதிகாரி சந்தானம் இன்று விசாரணை நடத்தினார்.
நிர்மலாதேவி விவகாரத்தில் பல்வேறு முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதால் அதனை உறுதிப்படுத்தும் வகையில் விசாரிக்கப்பட்டவர்களிடமே மீண்டும் விசாரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சந்தானம் கூறி உள்ளார்.