ரசீது இல்லாமல் விற்பனை செய்யும் விதை விற்பனை நிலையம், நர்சரி மீது கடும் நடவடிக்கை- அதிகாரி எச்சரிக்கை
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி, தர்மபுரி விதை ஆய்வு துணை இயக்குனர் பச்சையப்பன் கிருஷ்ணகிரியில் உள்ள விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் 600-க்கும் மேற்பட்ட விதை விற்பனை நிலையங்கள் மற்றும் நர்சரிகள் உள்ளன. தற்போது நல்ல மழை பெய்து வருவதால் விவசாயிகளுக்கு தேவையான விதைகள் மற்றும் நாற்றுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு வல்லுனர் நிலை, ஆதார நிலை, சான்று நிலை, உண்மை நிலை ஆகிய நிலைகளில் விதைகள் வழங்கப்படுகிறது.
சான்று அட்டைகள் வல்லுனர் நிலை விதைகளில் தங்க மஞ்சள் நிறத்திலும், ஆதார நிலை விதைகளில் வெள்ளை நிறத்திலும், சான்று நிலை விதைகளில் நீல நிறத்திலும், உண்மை நிலை விதைகளில் வெளிர் பச்சை நிறத்திலும் இருக்கும். உண்மை நிலை விதை தவிர மற்ற விதை சான்றட்டையுடன் உற்பத்தியாளர் அட்டையும் இருக்கும். சான்று பெற்ற விதைகளின் கொள்கலன்களில் சீலிடப்பட்ட ஈய வில்லைகள் பொருத்தப்பட்டிருக்கும்.
விதை விவர அட்டையில் பயிர், ரகம், நிலை, குவியல் எண், குறைந்தபட்ச முளைப்புத்திறன் சதவீதம், விதைத் தூய்மை சதவீதம், இனத்தூய்மை சதவீதம், ஈரப்பதம், நிகர எடை, விலை, சோதனை நாள், காலாவதி நாள், பரிந்துரைக்கப்படும் பருவ காலம், விதைப்புக்கு ஏற்ற பகுதி ஆகிய விவரங்கள் இருக்க வேண்டும்.
விவசாயிகளுக்கு விற்கப்படும் விதைகள் கோவை விதை சான்று இயக்குனரிடம் பதிவு செய்யப்பட்ட விதைகளையே விற்பனை செய்ய வேண்டும். விதை விற்பனையாளர்கள் விவசாயி அல்லது விற்பனை உரிமம் பெற்ற நர்சரிகளுக்கு மட்டுமே விதையை விற்பனை செய்ய வேண்டும்.
மேலும், விற்பனையாளர்கள் விதையின் ரகம், நிலை, குவியல் எண், காலாவதி நாள், விதைகள் இருப்பு, விற்பனை விலை ஆகிய விவரங்கள் அடங்கிய விற்பனை பலகை, விற்பனை நிலைய முகப்பில் தெளிவாக தெரியும்படி வைக்கப்பட வேண்டும். மேற்கண்ட சட்டத்தை பின்பற்றாமலும், விதை விற்பனை உரிமம் பெறாமலும், விதைகள் மற்றும் நாற்றுகள் விற்பனை செய்யும் விதை விற்பனை நிலையங்கள் மற்றும் நர்சரிகள் மீது விதை சட்டம் 1966 மற்றும் விதை கட்டுப்பாட்டு ஆணை 1983-ன் கீழ் சட்டப்படி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு, தண்டனை பெற்றுத்தரப்படும். எனவே, விவசாயிகள் விழிப்புடன் நல்ல தரமான விதையுடன் ரசீது பெற்று அதிக மகசூல் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

