ஒடிசாவை புரட்டி போட்ட பானி புயலுக்கு 9 பேர் பலி

பானி புயல் கோரத் தாண்டவத்துக்கு இன்று காலை வரை 9 பேர் பலியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. #CycloneFani
ஒடிசாவை புரட்டி போட்ட பானி புயலுக்கு 9 பேர் பலி
Published on

புவனேஸ்வரம்:

வங்க கடலில் உருவான பானி புயல் நேற்று காலை 8 மணிக்கு ஒடிசா மாநிலம் பூரி அருகே கரையை கடந்தது.

அப்போது 175 முதல் 230 கிலோ மீட்டர் வேகத்தில் பயங்கர சூறாவளி காற்று வீசியது. இதனால் ஒடிசா மாநிலத்தின் 14 மாவட்டங்களில் மிக கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஒடிசா மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளை பானி புயல் புரட்டி போட்டு இருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு புயல் மழையால் மிக கடுமையான சேதத்தை ஒடிசா மாநிலம் சந்தித்துள்ளது.

நவீன கருவிகள் மூலம் பானி புயலின் பயணப் பாதையை மிக துல்லியமாக கணித்து இருந்ததால் அது செல்லும் பகுதிகளில் இருந்து சுமார் 12 லட்சம் மக்களை ஒடிசா மாநில அரசு வெளியேற்றி பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்று இருந்தது. இந்த முன் எச்சரிக்கை காரணமாக பெருமளவு உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

பானி புயல் கோரத் தாண்டவத்துக்கு இன்று காலை வரை 9 பேர் பலியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வீடுகள் இடிந்தது மற்றும் புயலில் நேரடியாக சிக்கி சுமார் 200 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் அதிகம் இல்லாத நிலையில் மக்களின் உடமைகளுக்கு மிக பெரிய பாதிப்பையும், இழப்பையும் பானி புயல் ஏற்படுத்தி இருக்கிறது. மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் சூறாவளி காற்று வீசியதால் லட்சக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்து விட்டன.

14 மாவட்டங்களில் மின் கம்பங்கள் சாய்ந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. தொலை தொடர்பு சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. ஏராளமான மரங்கள் சாலைகளில் விழுந்து இருப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தலைநகர் புவனேஸ்வரம், கோவில் நகரம் பூரி ஆகியவற்றில் மிக கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வீடுகள், அலுவலகங்கள் நொறுங்கி உள்ளன.

பல்லாயிரக்கணக்கான வீடுகளில் கதவுகள், ஜன்னல்கள் உடைந்து சிதறின. மொட்டை மாடிகளில் அமைக்கப்பட்டு இருந்த தொலைத் தொடர்பு கோபுரங்கள் விழுந்ததால் செல்போன் சேவை முடங்கி உள்ளது.

புயல் கரையை கடந்த போது பலத்த மழை பெய்தது. இதனால் பூரி, புவனேஸ்வரம் நகரங்களில் 90 சதவீத பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. இன்று காலை முதல் அந்த 2 நகரங்களிலும் தண்ணீரை அகற்றும் பணிகள் நடந்து வருகிறது.

பூரியில் 90 சதவீத தெருக்களில் மரங்கள் விழுந்து கிடக்கின்றன. அந்த மரங்களை போர்கால அடிப்படையில் அகற்றி வருகிறார்கள். நேற்று இரவு மின்சாரமும், தொலை தொடர்பு சேவையும் இல்லை.

இதனால் பூரி, புவனேஸ்வரம் நகரங்கள் முடங்கின. பூரி நகரில் பெரும்பாலான மின் கம்பங்கள் சாய்ந்து கிடக்கின்றன. அந்த கம்பங்களை அகற்றி விட்டு புதிய மின் கம்பங்களை நடும் பணி நடந்து வருகிறது. எனவே பூரி நகரில் முழுமையான மின் இணைப்பு கிடைக்க குறைந்தபட்சம் 3 நாட்கள் ஆகும் என்று தெரிகிறது.

பானி புயல் பூரி அருகே கடந்ததால் அந்த நகரில்தான் அதிகப்பட்ச பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த நகரில் சுமார் 10 லட்சம் மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவ 400 முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.. அந்த முகாம்கள் மூலம் உணவு, குடிதண்ணீர், மருந்து போன்ற உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

பூரி நகரில் பல இடங்களில் சாலைகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவற்றை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.

புவனேஸ்வரம் நகரில் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் கட்டிடத்தில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. ரெயில்-பஸ்கள் போக்குவரத்துகள் இல்லாததால் பூரி, புவனேஸ்வரம் நகரங்களில் இருந்து மக்கள் வெளியேற முடியாமலும், உள்ளே வர முடியாமலும் தவித்தப்படி இருக்கிறார்கள்.

ஒடிசாவில் பாதிப்புக்குள்ளாகி தவித்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய மத்திய- மாநில அரசுகள் தீவிரமாக களம் இறங்கி உள்ளன. நூற்றுக்கணக்கான என்ஜினீயர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள் பூரி, புவனேஸ்வரம் நகரங்களில் முகாமிட்டு மின்சாரம் மற்றும் தொலை தொடர்பு சேவையை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

தேசிய பேரிடர் மீட்பு குழு படையும் 2 நகரங்களிலும் ரோந்து சுற்றி வருகிறது. இதற்கிடையே ஒடிசாவுக்கு கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு படை மூலம் உதவி பொருட்கள் அனுப்பப்பட்டு உள்ளன.

விசாகப்பட்டினத்தில் இருந்து ரன்விஜய் என்ற கடற்படை கப்பலில் ஏராளமான மருந்து மற்றும் குடிநீர் பொருட்கள் ஒடிசாவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது தவிர மேலும் 2 கடற்படை கப்பல்கள் நிவாரணப் பொருட்களுடன் தயார் நிலையில் உள்ளன.

நிவாரணப் பணிகளுக்கு இடையே சுகாதாரப் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒடிசாவில் நூற்றுக்கணக்கான குழுக்கள் அமைக்கப்பட்டு மருத்துவ பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்காளத்தில் ஆயிரக்கணக்கான ஹெக்டேர்களில் பயிரிடப்பட்டு இருந்த பயிர்கள் நாசமாகி உள்ளன. கால்நடைகளும் உயிர் இழந்து இருப்பதாக தெரிய வந்துள்ளது.

பானி புயல் காரணமாக ஒடிசா மாநிலத்தில் சுமார் 220 ரெயில் சேவைகள் முடங்கி உள்ளன. நாளை முதல் ரெயில் சேவை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புவனேஸ்வரம் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முதல் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்தது. இன்று மதியம் முதல் அங்கு விமானச் சேவை தொடங்கியது. வாகன போக்குவரத்துகளும் நாளை முதல் சீராகும் என்று தெரிகிறது.

நவீன கருவிகள் உதவியால் பெறப்பட்ட எச்சரிக்கையை தொடர்ந்து 12 லட்சம் பேர் இந்த புயலில் இருந்து தப்பி உள்ளனர். மக்கள் வெளியேற்றப்பட்டதால் தான் 1999-ம் ஆண்டு புயல் பாதித்தபோது ஏற்பட்ட உயிரிழப்பு போல இந்த தடவை ஏற்படவில்லை. மக்கள் அதிகாரிகளின் துணையுடன் முகாம்களில் பத்திரமாக இருந்தனர்.

இன்று காலை பொது மக்கள் தங்கள் வீடுகளுக்கு செல்ல தொடங்கினார்கள். இன்று மதியம் வரை சுமார் 7 லட்சம் மக்கள் தங்கள் பகுதிகளுக்கு திரும்பி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக ஒடிசாவில் கடும் பாதிப்புகளுக்கு மத்தியிலும் இயல்பு வாழ்க்கை மெல்ல மெல்ல திரும்ப தொடங்கி இருக்கிறது. #CycloneFani

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com