

3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டி தொடரில் விளையாடுவதற்காக கனே வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியா வந்துள்ளது. இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வருகிற 22-ந் தேதி மும்பையில் நடக்கிறது. அதற்கு முன்பாக நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணிக்கு எதிராக இரண்டு பயிற்சி ஆட்டங்களில் ஆடுகிறது.
இதில் நியூசிலாந்து-இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணிகள் இடையிலான முதலாவது பயிற்சி ஆட்டம் மும்பையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. அடுத்த பயிற்சி ஆட்டம் 19-ந் தேதி நடைபெறுகிறது.
இங்குள்ள சூழ்நிலைக்கு தகுந்தபடி தயாராக நியூசிலாந்து அணிக்கு இந்த பயிற்சி ஆட்டம் மிகவும் முக்கியமானதாகும். இதனால் நியூசிலாந்து அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.
ஸ்ரீரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணியில் இளம் வீரர்கள் அதிக அளவில் இடம் பிடித்துள்ளனர். தேர்வு குழுவினரின் கவனத்தை ஈர்க்க வாரிய லெவன் அணி வீரர்கள் சிறப்பாக செயல்பட முயற்சிப்பார்கள். வாரிய தலைவர் அணியில், நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் கழற்றி விடப்பட்ட லோகேஷ் ராகுல் கூடுதல் வீரராக நேற்று சேர்க்கப்பட்டார்.
மும்பையில் நேற்று நியூசிலாந்து அணியினர் பயிற்சியில் ஈடுபட்ட காட்சி.
காயம் அடைந்த ராகுல் சாஹருக்கு பதிலாக கர்நாடக பேட்ஸ்மேன் கரண் ஷர்மா அணியில் இணைந்துள்ளார். மும்பையில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் இந்த ஆட்டத்துக்கு மழையால் பாதிப்பு வரலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
பயிற்சி ஆட்டத்துக்கான இரு அணி வீரர்கள் வருமாறு:-
நியூசிலாந்து அணி: கனே வில்லியம்சன் (கேப்டன்), டாட் ஆஸ்டில், டிரென்ட் பவுல்ட், காலின் டி கிரான்ட்ஹோம், மார்ட்டின் கப்தில், மேட் ஹென்றி, டாம் லாதம், ஹென்றி நிகோல்ஸ், ஆடம் மில்னே, காலின் முன்ரோ, கிளைன் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னெர், டிம் சவுதி, ராஸ் டெய்லர், ஜார்ஜ் ஒர்க்கர்.