ஒட்டன்சத்திரம் அருகே கட்டிட தொழிலாளி கொலை வழக்கில் 2 பேர் கைது

ஒட்டன்சத்திரம் அருகே கட்டிட தொழிலாளி கொலை வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

ஒட்டன்சத்திரம்:

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே, வெரியப்பூர்-தேவசின்னாம்பட்டி சாலையில் குளம் ஒன்று உள்ளது. தண்ணீர் இல்லாத அந்த குளத்தில் நேற்று முன்தினம் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த ஒட்டன்சத்திரம் போலீஸ் துணை சூப்பிரண்டு அசோகன், இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கொலை செய்யப்பட்ட வாலிபர், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள பழையபட்டியை சேர்ந்த தொத்தப்பன் மகன் கார்த்தி (வயது 24) என்றும், அவர் கட்டிட தொழிலாளி என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். இதற்காக போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் தொழிலாளி கொலை வழக்கில் பழையபட்டியை சேர்ந்த கண்ணன் (20), அவருடைய நண்பர் மணிகண்டன் (47) ஆகிய 2 பேரை போலீசார் நேற்று கைது செய்து விசாரணை நடத்தினர். அவர்கள் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர். அதில் கண்ணன் மனைவியிடம் கார்த்தி தவறாக நடக்க முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த கண்ணன், தனது நண்பர் மணிகண்டனுடன் சேர்ந்து கார்த்தியை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார். கார்த்தியை வெரியப்பூர்-தேவசின்னாம்பட்டி பகுதியில் உள்ள குளத்திற்கு அழைத்து சென்று மது அருந்தியுள்ளனர்.

பின்னர் போதையில் இருந்த கார்த்தியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்ததாகவும் அவர்கள் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com