காய்கறி வரத்து குறைந்ததால் தினசரி சந்தை போல காட்சியளிக்கும் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்

காய்கறி வரத்து அடியோடு குறைந்ததால் தினசரி சந்தை போல ஒட்டன்சத்திரம் மார்க்கெட் காட்சியளிக்கிறது.
காய்கறி வரத்து குறைந்ததால் தினசரி சந்தை போல காட்சியளிக்கும் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்
Published on

ஒட்டன்சத்திரம்:

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் தமிழகத்திலேயே 2-வது மிகப் பெரிய மார்க்கெட் உள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளியூர்களில் இருந்தும் இங்கு காய்கறிகள் கொண்டு வரப்பட்டு கேரளா போன்ற வெளி மாநிலத்துக்கும் தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும்.

கேரள மாநிலத்தின் 60 சதவீத காய்கறி தேவையை ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டே பூர்த்தி செய்து வந்தது. தினசரி 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் கேரளாவுக்கு இங்கிருந்து காய்கறிகள் அனுப்பப்படும். ஆனால் கடந்த 6 மாதமாக வறட்சி காரணமாக காய்கறிகள் வரத்து குறைந்து கொண்டே வருகிறது.

இதனால் பல ஊர்களில் இருந்து காய்கறிகள் வருவதே இல்லை. குறிப்பிட்ட சில கிராமங்களில் இருந்து மட்டும் காய்கறிகள் கொண்டு வரப்படுகிறது.

ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் பொதுமக்கள் உள்ளே சென்றால் நடந்து செல்வதற்கே இயலாதவாறு கூட்டம் காணப்படும். வாகனங்களும் செல்ல முடியாத நிலையில் காணப்படும்.

ஆனால் தற்போது தெருக்களில் காணப்படும் சந்தை போல ஒட்டன்சத்திரம் மார்க்கெட் மாறியுள்ளது. இதனால் வியாபாரிகள் மற்றும் கமி‌ஷன் கடைக்காரர்கள் மிகுந்த வேதனையடைந்துள்ளனர். வறட்சியின் காரணமாக விவசாயிகள் விளை பொருட்களை உற்பத்தி செய்ய முடியாத நிலையில் உள்ளனர். விவசாயிகளுக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் வியாபாரிகளுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் தினசரி 100-க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு தற்போது வேலை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. தினசரி கோடிக்கணக்கான வருவாய் ஈட்டித் தரும் ஒட்டன்சத்திரம் மார்க்கெட் வருவாய் இன்றி தவிப்பதால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com