ஒக்கி புயலில் மாயமான நீரோடி மீனவர்கள் 36 பேருக்கு தேவாலயத்தில் நினைவு திருப்பலி

ஒக்கி புயலில் மாயமான நீரோடி துறை மீனவர்கள் 36 பேருக்கு நினைவு திருப்பலி நடத்தப்பட்டது. திருப்பலி முடிந்த பின்னர் அதில் பங்கேற்ற மக்கள் ஆலயத்தில் வைக்கப்பட்ட மீனவர்களின் படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
ஒக்கி புயலில் மாயமான நீரோடி மீனவர்கள் 36 பேருக்கு தேவாலயத்தில் நினைவு திருப்பலி
Published on

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தை ஒக்கி புயல் தாக்கியதில் கடலுக்கு சென்ற ஆயிரக்கணக்கான மீனவர்கள் மாயமானார்கள்.

மாயமான மீனவர்களில் பலர் மீட்கப்பட்டனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் நீரோடி துறையை சேர்ந்த மீனவர்கள் பலர் கடலில் மூழ்கி பலியாகி இருக்கலாம் என்று தெரிய வந்தது.

இதனால் நீரோடி துறை கடற்கரை கிராமம் சோகத்தில் மூழ்கியது. கடலுக்கு சென்றவர்களில் இதுவரை கரை திரும்பாதவர்கள் யார்? யார்? என்பதை மீனவ அமைப்புகள் கணக்கெடுத்தனர். இதில், நீரோடி துறையில் இருந்து மட்டும் 36 பேரின் கதி என்னவென்று தெரியாமல் இருந்தது.

நீரோடி துறை மீனவர்கள் 36 பேரும் பலியாகி இருக்கலாம் என்று கருதப்பட்டதால் அவர்களின் புகைப்படத்துடன் நீரோடி துறையில் நினைவு அஞ்சலி பேனர்கள் கட்டப்பட்டன. இது மீனவ கிராமங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் நேற்று நீரோடி ஆலயத்தில் 36 பேருக்கும் நினைவு திருப்பலி நடத்தப்பட்டது. இதற்காக 36 பேரின் புகைப்படங்களும் ஆலயத்தில் வரிசையாக வைக்கப்பட்டது. அதன் பின்னர் நடந்த திருப்பலியை திருவனந்தபுரம் மறை மாவட்ட துணை ஆயர் கிறிஸ்துதாஸ் தலைமை ஏற்று நடத்தினார். இதில் நீரோடி பங்கு தந்தை லூசியான்கோமஸ் உள்பட 20 பாதிரியார்கள் கலந்து கொண்டனர்.

திருப்பலி முடிந்த பின்னர் அதில் பங்கேற்ற மக்கள் ஆலயத்தில் வைக்கப்பட்ட மீனவர்களின் படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அதன் பிறகு அவர்கள் அனைவரும் நீரோடி கடற்கரைக்கு சென்றனர்.

அங்கும் அவர்கள் மீனவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இதில், நீரோடி மற்றும் அதைச் சுற்றியுள்ள கடற்கரை கிராம மக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

இதற்கிடையே ஒக்கி புயலில் சிக்கிய மீனவர்கள் மாயமாகி வருகிற 29-ந்தேதியுடன் 1 மாதம் நிறைவடையும். எனவே அன்று குமரி மேற்கு மாவட்ட கடற்கரை கிராமங்களில் உள்ள ஆலயங்களில் சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனை நடத்தப்படும் என திருவனந்தபுரம் உயர் மறை மாவட்ட பேராயர் சூசை பாக்கியம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பு திருவனந்தபுரம் மறை மாவட்ட கத்தோலிக்க தேவாலயங்களில் நேற்று வெளியிடப்பட்டது.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பிறப்பையொட்டி ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்றவர்கள் இம்மாத இறுதிக்குள் கரை திரும்புவது வழக்கம். எனவே வருகிற 31-ந்தேதி வரை அவர்களுக்காக காத்திருப்பது என குமரி மாவட்ட மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.

அவர்கள் அனைவரும் நலமுடன் திரும்ப வேண்டுமென்றும் மீனவ அமைப்புகள் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com