

திருவனந்தபுரம்:
குமரி மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் 30-ந் தேதி ஒக்கி புயல் தாக்கியபோது கேரளாவிலும் பலத்த சேதம் ஏற்பட்டது. அங்கும் கடலுக்கு சென்ற ஆயிரக்கணக்கான மீனவர்கள் புயலில் சிக்கி மாயமானார்கள். இவர்களில் 75-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.
அவர்களின் பிணங்கள் மீட்கப்பட்டு கேரள அரசு ஆஸ்பத்திரிகளில் வைக்கப்பட்டு உள்ளது. இதில் பலரது உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. இதுபோல இன்னும் நூற்றுக்கும் மேற்பட்டோரின் கதி என்ன? என்பது தெரியவில்லை. இதனால் கேரளாவின் பூந்துறை, விழிஞ்ஞம், சங்குமுகம், கோவளம் கடற்கரை கிராமங்கள் களையிழந்து காணப்பட்டது.
மீனவர்கள் கரை திரும்பாததாலும் பல குடும்பங்களில் இறப்புகள் நிகழ்ந்ததாலும் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் இன்றி கடற்கரை கிராமங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. கேரள அரசும் இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது.
வழக்கமாக திருவனந்தபுரத்தை அடுத்த கோவளம் கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் சுற்றுலாத்துறை சார்பில் விமரிசையாக கொண்டாடப்படும். இந்த நிகழ்ச்சியை மாநில சுற்றுலாத்துறை ரத்து செய்தது. மேலும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு பதிலாக ஒக்கி புயலில் பலியானாவர்களுக்கும், மாயமானவர்களுக்கும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை நடத்தியது.
கோவளம் கடற்கரையில் நேற்று நள்ளிரவு நடந்த இந்த நிகழ்ச்சிக்கு மாநில சுற்றுலாத்துறை மந்திரி கடகம் பள்ளி சுரேந்திரன், திருவனந்தபுரம் மேயர் பிரசாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்கள் கடற்கரையில் 1000 அகல் விளக்குகள், மெழுகுவர்த்திகள் ஏற்றி பிரார்த்தனை செய்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய மந்திரி கடகம் பள்ளி சுரேந்திரன், மத்திய, மாநில அரசுகள் இணைந்து ஆயிரக்கணக்கான மீனவர்களை மீட்டது என்றாலும் பல நூறு மீனவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை. அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற மாநில அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.
உறவுகளை இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறும் நிகழ்வாக இந்த பிரார்த்தனை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு தேவையான நிவாரணம் வழங்கப்படும் என்றார்.
கோவளம் கடற்கரைக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலாபயணிகள், பாதுகாப்புக்கு நின்ற போலீசாரும், அகல்விளக்கு, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். இதில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான கிராம மக்களும் கலந்து கொண்டனர்.