

சென்னை:
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர்கள் பங்களாவில் ஓ. பன்னீர் செல்வம் தங்கி இருக்கிறார்.
ஓ. பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்து கட்சி பிளவுபட்டதும் அரசு வீட்டை காலிசெய்யும் படி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதையடுத்து அந்த வீட்டை காலி செய்யும் முடிவுக்கு வந்தார். போயஸ் கார்டன் அருகில் உள்ள வீனஸ் காலனியில் புதுவீட்டை வாடகைக்கு அமர்த்தி பால் காய்ச்சினார்.
ஆனால் அரசு பங்களாவை காலி செய்யவில்லை. கட்சி நிர்வாகிகளை சந்திப்பது ஆலோசனை கூட்டங்கள் நடத்துவது உள்ளிட்ட கட்சி பணிகள் அனைத்தும் அரசு பங்களாவிலேயே நடைபெறுகிறது.
இரு அணிகளும் இணைப்பு முயற்சி தொடங்கியதையடுத்து அரசு வீட்டை காலி செய்ய வைக்கும் முடிவை அரசும் கைவிட்டது.
பங்களாவில் ஏ.சி. பழுதாகி இருந்தது. அதை பொதுப்பணித்துறையினர் சீரமைத்து வருகிறார்கள். அதே போல் பங்களாவை சுற்றி உள்ள தோட்டங்களும் சீரமைக்கப்பட்டு வருகிறது. அரசு செலவிலேயே மராமத்து செலவு நடைபெறுவது ஓ.பி.எஸ். அணி தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.