

அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணி சார்பில் சிவகாசியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:-
தற்போது அமைந்துள்ள எடப்படி அரசு ஒரு விபத்து அரசு. இந்த அரசு தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ளது. நான் முதல்-அமைச்சராக இருக்கும் போது குடிநீர் பிரச்சனைக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என துரைமுருகன் குற்றம் சாட்டுகிறார். சென்னை குடிநீர் பிரச்சனைக்காக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து 2½ டி.எம்.சி. தண்ணீரை பெற்று வந்தேன். இதன்மூலம் குடிநீர் பிரச்சனை தீர்ந்தது.
நான் ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்டவன். அவருக்கு சோதனை வந்த போது 3 முறை என்னை முதல்-அமைச்சராக நியமித்தார். சசிகலா நடராஜன் போடி நாயக்கனூர் தொகுதியில் என்னை தோற்கடிப்பேன் என கூறுகிறார். மக்கள் எனக்கு என்றும் ஆதரவாக இருப்பார்கள். நாங்கள் தொடங்கி உள்ள தர்மயுத்தம் தொடர்கிறது.
தொழில் அதிபர் சேகர் ரெட்டியுடன் தொடர்பு வைத்த ஓ.பி.எஸ்.க்கு ஊழல் பற்றி பேச தகுதி இல்லை என அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார். இதற்கு பதில் அளிக்க வேண்டிய கட்டாயம் எனக்கு உள்ளது.
சேகர் ரெட்டியுடன் எனக்கு எந்த நேரத்திலும் தொடர்பு இருந்தது இல்லை. புரட்சித்தலைவி அம்மா வழக்கில் இருந்து விடுதலை பெற திருப்பதி சென்று வழிபாடு செய்தேன். அப்போது திருப்பதி தேவஸ்தான போர்டு நிர்வாக உறுப்பினர் என்ற முறையில் சேகர் ரெட்டி அங்கு வந்தார். நான் கோவிலை விட்டு வெளியே வரும்போது என்னுடன் அவரும் வந்தார். இதை சிலர் புகைப்படம் எடுத்தனர். மற்றபடி எனக்கும் தொழில் அதிபர் சேகர் ரெட்டிக்கும் எந்த தொர்பும் இல்லை. இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தால் விசாரணையை சந்திக்க தயாராக இருக்கிறேன்.
நடிகர் கமல்ஹாசன் இந்த அரசில் ஊழல் மலிந்து விட்டது என்று கூறினார். அதற்கு அமைச்சர்கள் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்கின்றனர். கமல்ஹாசன் மிகச்சிறந்த நடிகர். அனைத்து மொழிகளையும் உள்வாங்கி சிறப்பாக நடிக்க கூடியவர். அவருக்கு இந்த அரசை பற்றி கருத்து கூற உரிமை இருக்கிறது.
அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் நுழைய ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட அவைத் தலைவர் மதுசூதனன், பொருளாளரான எனக்கும் தான் தகுதி உண்டு.
சசிகலாவை அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக தேர்தல் கமிஷன் ஏற்றுக் கொள்ளவில்லை. அவரோ, அவரால் நியமிக்கப்பட்டவர்களோ தலைமைக் கழகத்திற்குள் நுழைய தகுதி கிடையாது.
தினரகனுக்கு புதிய பொறுப்பாளர்களை நியமிக்கும் அதிகாரம் இல்லை. அமைச்சர்கள் ஏதாவது பேசினால் தங்கள் பதவி போய் விடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.
ஜெயலலிதாவின் மரணத்திற்கு நீதி விசாரணை வேண்டும். சசிகலா குடும்பத்தினர் கட்சியை விட்டு வெளியேற வேண்டும் என்ற தர்மயுத்தத்தின் வெற்றி நெருங்கி விட்டது.