

சென்னை:
பிளவுப்பட்ட அ.தி.மு.க. இரு அணிகளாக செயல்பட்டு வருகின்ற நிலையில் அவற்றை இணைக்கும் முயற்சி பலமுறை தோல்வி அடைந்தது.
இரு அணிகளுக்கு இடையே வெளிப்படையான பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என்றாலும் மறைமுகமாக பல்வேறு கட்டங்களாக நடந்துள்ளது. அணிகள் இணைப்பு முயற்சி பலன் அளிக்காததால் ஓ.பன்னீர் செல்வம் அணியினர் தமிழக அரசை எதிர்த்து போராட்டமும் அறிவித்துள்ளனர்.
பொது மக்கள் பிரச்சனையை கையில் எடுத்து மாவட்டம் தோறும் ஆர்ப்பாட்டமும் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களையும் நிர்வாகிகளையும் சந்தித்து பேசினார்.
தற்போது தங்கள் அணியை பலப்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார். ஓ.பன்னீர்செல்வத்துடன் அ.தி.மு.க.வின் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், நகரம், ஒன்றியம், பகுதி, கிளை கழக நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பலர் உள்ளனர்.
இரு அணிகளும் சேர்ந்தால் உயர்மட்ட பொறுப்பில் இருந்து கீழ்மட்ட பதவி வரை பகிர்ந்து கொள்ளலாம் என ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் இதுவரையில் காத்து இருந்தனர். ஆனால் இணைப்புக்கு சாதகமான சூழல் இல்லாததால் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்துள்ளனர்.
மாநில, மாவட்ட, தலைமை கழக நிர்வாகிகள் என ஒருபட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இது தவிர நகரம், ஒன்றியம், பகுதி போன்ற பொறுப்புகளுக்கு தமிழக அளவில் நிர்வாகிகள் ஓ.பி.எஸ். அணியில் தயாரித்து வைத்துள்ளனர். விரைவில் புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய நிர்வாகிகள் அறிவிப்பது குறித்தும், அ.தி.மு.க. அம்மா அணிக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு இருப்பது குறித்தும் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் இன்று ஆலோசனை நடத்தினர். சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பி.எஸ். வீட்டில் இந்த கூட்டம் நடந்தது.
இதில் கே.பி.முனுசாமி, செம்மலை, நத்தம் விஸ்வநாதன், மா.பா.பாண்டியராஜன், மனோஜ் பாண்டியன், மைத்ரேயன் எம்.பி. உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் 10-ந்தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. தமிழக அரசை கண்டித்து நடக்கும் முதல் போராட்டத்தை சிறப்பாக நடத்துவது, ஆயிரக்கணக்கானவர்களை இதில் பங்கேற்க செய்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இதுகுறித்து ஓ.பி.எஸ். அணியின் ஆதரவாளர் ஒருவர் கூறும்போது, கட்சியின் கட்டமைப்பை உருவாக்கி பலப்படுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது. கிளை கழகம் முதல் நகரம் வரையிலும் மாநில, மாவட்ட அளவிலும் புதிய நிர்வாகிகளை நியமித்து வலுவான கட்டமைப்பை உருவாக்க புதிய நிர்வாகிகளை விரைவில் அறிவிக்க இருக்கிறோம் என்றார்.