

திருவனந்தபுரம்:
கேரளா முழுவதும் தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்களில் ஒரு பகுதியினர் சம்பள உயர்வு கேட்டு கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதை தொடர்ந்து, ஒருங்கிணைந்த செவிலியர்கள் சங்கம் (யுஎன்ஏ) மற்றும் இந்திய செவிலியர்கள் சங்கம் சார்பில் வரும் திங்கட்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் பேராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 80,000 செவிலியர்கள் காலவறையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
இதுகுறித்து யுஎன்ஏ தலைவர் ஜாஸ்மீன் ஷா கூறுகையில், “தனியார் மருத்துவமனைகளில் செவிலியர்கள் அனைவரும் பல ஆண்டுகளுக்கு குறைந்த சம்பளத்தில் பயிற்சி நர்சுகளாக வேலை பார்க்க வைக்கப்படுகின்றனர். இதுபோன்ற கடுமையான சூழ்நிலையில் எங்களால் வேலை பார்க்க முடியாது. மேலும் உச்ச நீதிமன்றம் அறிவித்தபடி குறைந்தபட்சம் 20000 ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உள்ள கேரளாவிற்கான சுகாதார சேவை நிறுவனங்களின் சங்கத் துணைத்தலைவர் மார்த்தாண்ட பிள்ளை இப்போராட்டம் குறித்து கூறும்போது, “செவிலியர்கள் வேலைநிறுத்ததில் ஈடுபட்டால் அது மருத்துவமனையில் உள்ள நோயாளிகளை பெரிதும் பாதிக்கும்” என்றார்.
செவிலியர்கள் போராட்டத்தில் அரசு தலையிட்டு, நிலைமையை சரிசெய்ய வேண்டும் என மருத்துவமனை நிர்வாகங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.