சாயக்கழிவு நீரால் கோவையில் நொய்யல் ஆறு பாழடைந்தது

கோவையில் உள்ள சாயப்பட்டறை கழிவு நீர், சாக்கடை கழிவுகள் கலந்து வருவதால் நொய்யல் ஆறு பாழடைந்தது.
கோவை இருகூர் அருகே உள்ள ராவத்தூர் நொய்யல் ஆற்றில் நுரையுடன் வந்த தண்ணீர்.
கோவை இருகூர் அருகே உள்ள ராவத்தூர் நொய்யல் ஆற்றில் நுரையுடன் வந்த தண்ணீர்.
Published on

இருகூர்:

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உற்பத்தியாகும் நொய்யல் ஆறு கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்கள் வழியாக பாய்ந்து காவிரியில் கலக்கிறது.

கடந்த சில ஆண்டுகளாக நொய்யல் ஆற்றுக்கு வரும் தண்ணீர் வழித்தடம் மறிக்கப்பட்டதால் தண்ணீர் வரத்து அடியோடு குறைந்தது.

மேலும் கோவை புறநகர், திருப்பூர் பகுதியில் நொய்யல் ஆறுகள் குப்பை கொட்டும் இடமாகவும், சாக்கடை, சாயக்கழிவு திறந்துவிடும் கால்வாயாகவும் மாறியது.

விவசாயத்திற்கு முக்கிய தேவையாக விளங்கி வந்த நொய்யல் ஆறு மாசுபட்டதன் காரணமாக பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 6 ஆண்டுகளுக்கு பின்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்டத்தில் பலத்த மழை கொட்டியது. இதன் காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது தண்ணீர் ஓட்டத்தில் அங்கு கிடந்த கழிவுகள், குப்பைகள், சாயக்கழிவுகள் அடித்து செல்லப்பட்டது.

தண்ணீர் நுரை பொங்கியபடியும், துர்நாற்றம் வீசிய படியும் சென்றது. இதை பார்வையிட வந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். சமூக ஆர்வலர்கள் சாயப்பட்டறை கழிவுதான் இதற்கு காரணம் என்றும், எனவே அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வற்புறுத்தினர்.

இந்த நிலையில் திருப்பூருக்கு வந்த சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பணன் நொய்யல் ஆற்று நுரைக்கு சாயப்பட்டறை காரணம் அல்ல. சோப்பு நுரை தான் காரணம் என்றார். அமைச்சரின் இந்த பேச்சு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பொதுமக்கள் மத்தியில் கேலி-கிண்டலாக பேசப்பட்டு சமூக வலைத்தளங்களில் வாட்டி எடுத்தனர்.

இந்த பரபரப்பு முடிந்த நேரத்தில் நொய்யல் ஆற்றை மாவட்ட நிர்வாகம் சுத்தப்படுத்தும் பணி தொடங்கியது. ஆனாலும் சில இடங்களில் சாய கழிவு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் நொய்யல் ஆறு தொடர்ந்து மாசு அடைந்து வருகிறது.

கோவையில் இருந்து நொய்யல் ஆறு இருகூர் அருகே உள்ள ராவத்தூர், சோமனூர், கருமத்தம் பட்டி, சாமளாபுரம் வழியாக செல்கிறது.

இந்த ஆற்றில் கோவையில் உள்ள சாயப்பட்டறை கழிவு நீர், சாக்கடை கழிவுகள் கலந்து வருவதால் ஆற்று நீர் நுரை தள்ளியபடி வருகிறது. இதில் பெரிதும் பாதிக்கப்படுவது இருகூர் அருகே உள்ள ராவத்தூர் பகுதியாகும்.

நுரை கலந்து வருவதால் ஆற்று நீர் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நுரை காற்றில் பறந்து வருவதால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மீது விழுந்து உடலில் அரிப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

இந்த நுரைக்கு ராவத்தூர் பகுதியில் உள்ள தென்னை மரங்களும் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர். ராவத்தூர் பகுதியில் இந்தியன் ஆயில் நிறுவனம் உள்ளது.

இங்கு பெட்ரோல் நிரப்ப வரும் டிரைவர்கள் மீதும் நுரை காற்றில் பறந்து வருவதால் அவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். நொய்யல் ஆற்றில் நுரை கலந்து வருவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

எனவே நொய்யல் ஆறு மீட்கப்பட்டு மீண்டும் பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்குமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com