விருத்தாசலம் அருகே ஓடும் ரெயிலில் மோதல்- வடமாநில வாலிபர் கொலை?

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே ஓடும் ரெயிலில் ஏற்பட்ட மோதலில் வடமாநில வாலிபர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரெயிலில் இருந்து விழுந்து பலியான ஆகாஷ்தாசின் உடல்.
ரெயிலில் இருந்து விழுந்து பலியான ஆகாஷ்தாசின் உடல்.
Published on

விருத்தாசலம்:

சென்னை தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு நேற்று மாலை 4 மணிக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது.

அந்த ரெயிலில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 5 வாலிபர்கள் திருச்சிக்கு பயணம் செய்தனர். ஓடும் ரெயிலில் அவர்களுக்கிடையே திடீரென்று தகராறு ஏற்பட்டது. அப்போது ஒருவருக்கொருவர் மாறி மாறி தாக்கிக்கொண்டனர்.

அந்த ரெயில் இரவு 9 மணிக்கு விருத்தாசலம் ரெயில் நிலையத்துக்கு வந்தது. அதன் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சாத்துக்கூடல் மேல்பாதி அருகே சென்று கொண்டிருந்தது.

அப்போது அந்த வாலிபர்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. யாரும் எதிர்பாராத வகையில் திடீரென்று 5 வாலிபர்களில் ஒருவர் ரெயிலில் இருந்து கீழே விழுந்தார்.

உடனே ரெயிலில் பயணம் செய்த மற்ற பயணிகள் ரெயில் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினர். இது குறித்த தகவல் அறிந்து ரெயிலில் இருந்த ரெயில்வே போலீசார் கீழே இறங்கினர். அங்கு கீழே விழுந்த வாலிபர் இறந்து கிடந்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே அந்த வாலிபரின் உடலை கைப்பற்றி விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சப்-இன்ஸ்பெக்டர் சின்னப்பன் தலைமையிலான போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

இதையறிந்த வடமாநில வாலிபர்கள் 4 பேரும் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் பிடித்து விருத்தாசலம் ரெயில் நிலைய போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

4 வாலிபர்களிடமும் இன்ஸ்பெக்டர் அம்பேத்கார் விசாரணை நடத்தினார். அதில் ரெயிலில் இருந்து கீழே விழுந்து இறந்த வாலிபர் பெயர் ஆகாஷ்தாஸ் (வயது 22) என்பது தெரிய வந்தது.

இவர்கள் 5 பேரும் சென்னையில் இருந்து திருச்சி பகுதிக்கு ஒப்பந்த ஊழியர்களாக வேலைக்கு சென்றவர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

மேலும் வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர்கள் என்பதால் ஒடிசா மொழி தெரிந்த மற்றொரு வாலிபரை வைத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

5 பேருக்குள் ஏற்பட்ட தகராறில் வாலிபர் ஆகாஷ் தாசை மற்ற 4 வாலிபர்களும் சேர்ந்து ரெயிலில் இருந்து கீழே தள்ளி கொன்றார்களா? அல்லது ரெயில் இருந்து கீழே தவறி விழுந்து பலியானாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com