கேரளா: மாணவி தலையில் சுத்தியலால் தாக்கிய வடமாநில தொழிலாளி கைது

கேரளாவில் என்ஜினீயரிங் கல்லுரி மாணவியின் தலையின் மீது சுத்தியலால் தாக்கிய வடமாநில தொழிலாளியை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரளா: மாணவி தலையில் சுத்தியலால் தாக்கிய வடமாநில தொழிலாளி கைது
Published on

திருவனந்தபுரம்:

கேரளாவில் வடமாநிலங்களை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் தங்கி இருந்து வேலை செய்து வருகிறார்கள். இவர்கள் சாலை அமைக்கும் பணி, கட்டிட பணி, ஓட்டல் தொழிலாளர்கள் என்று பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் கம்பளி போர்வைகள், பெல்ட், பர்சு, கைப்பைகள் போன்ற தோல் பொருட்கள் விற்பனையிலும் வீதிவீதியாக சென்று ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த வடமாநில தொழிலாளர்களில் சிலர் கேரளாவில் வன்முறை செயல்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள். கொலை, கற்பழிப்பு போன்ற கொடூர செயல்களிலும் ஈடுபட்டு பல வடமாநில தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதைத்தொடர்ந்து வடமாநில தொழிலாளர்கள் அருகில் உள்ள போலீஸ் நிலையங்களில் தங்களது புகைப்படம் மற்றும் விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆனாலும் இந்த உத்தரவுகளை கடை பிடிக்காமல் பல வடமாநில தொழிலாளர்கள் கேரளாவில் சுற்றி திரிகிறார்கள். அவர்கள் குற்ற செயல்களில் ஈடுபடுவது பற்றி போலீசாருக்கு பல்வேறு புகார்களும் செல்கிறது.

இந்த நிலையில் திருவனந்தபுரம் அருகே வர்க்கலை பகுதியில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவி ஒருவர் நடுரோட்டில் வட மாநில தொழிலாளி ஒருவரால் தலையில் சுத்தியலால் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்த சம்பவம் நடந்து உள்ளது. அந்த மாணவியின் பெயர் தன்யா (வயது20). இவர் கல்லூரிக்கு நடந்து சென்ற போது அவரை பின் தொடர்ந்து வந்த முகம்மது மக்காராம் என்ற உத்தரபிரதேச வாலிபர் அவரது பின் தலையில் சுத்தியலால் தாக்கினார்.

இதில் படுகாயம் அடைந்த அந்த மாணவி அலறியபடி மயங்கி விழுந்தார். அவரது சத்தம் கேட்டு ஓடி வந்த பொதுமக்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்து வர்க்கலை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து எதற்காக மாணவியை தாக்கினார் என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

படுகாயம் அடைந்த மாணவி தன்யா அந்த பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com