ஓசூர் அருகே வடமாநில தொழிலாளி குத்திக்கொலை

ஓசூர் அருகே குடிபோதையில் வடமாநில தொழிலாளியை நண்பர்கள் குத்திக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓசூர் அருகே வடமாநில தொழிலாளி குத்திக்கொலை
Published on

ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ரோஜா, மல்லிகை உள்ளிட்ட பல்லேறு மலர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதனால் மலர் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் பல உள்ளன. மேலும் இந்த பகுதியில் ஏராளமான தொழிற் சாலைகளும் உள்ளது. இங்கு வடமாநிலத்தை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் தங்கியிருந்து பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் ஹரிஸ் ஜோதி குன்வர்(வயது 28). இவர் ஓசூர் தாலுகா பாகலூர் அருகே உள்ள கொடியாளம் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் மலர் ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தில் கடந்த 3 ஆண்டுகளாக தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிறுவனத்தின் அருகிலேயே வாடகைக்கு ஒரு அறை எடுத்து நண்பர்களுடன் அவர் தங்கியிருந்தார்.

நேற்று (ஞாயிற்றுகிழமை) விடுமுறை நாள் என்பதால் ஹரிஸ் ஜோதி குன்வர் மற்றும் அவரது நண்பர்கள் சுனில், திபுல், புட்டா ஆகியோர் வழக்கம்போல் மது வாங்கி கொண்டு வந்து அறையில் வைத்து நள்ளிரவில் மது குடித்தனர்.

அப்போது போதை தலைக்கெறியதை தொடர்ந்து அவர்களுக்குள் பணம் கொடுக்கல்-வாங்கல் வி‌ஷயம் தொடர்பாக வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சுனில், திபுல் ஆகியோர் ஹரிஸ் ஜோதி குன்வரையும், மற்றொரு நண்பர் புட்டா(30)வையும் கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு ஓடி விட்டனர். இதில் படுகாயம் அடைந்த ஹரிஸ் ஜோதி குன்வர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். புட்டா குடல் சரிந்து உயிருக்கு போராடினார். அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த புட்டாவை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து தகவல் அறிந்த பாகலூர் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஹரிஸ் ஜோதி குன்வர் உடலை கைப்பற்றி ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தலைமறைவாக உள்ள கொலையாளிகள் சுனில், திபுல் ஆகிய 2 பேரையும் தேடி வருகிறார்கள். இவர்கள் 2 பேரும் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர்கள். எனவே அசாம் மாநில போலீசாருக்கும் இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com