

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த 16-ம் தேதி காலமானார். அவரது உடல் அரசு முழு மரியாதையுடன் டெல்லி ஸ்மிருதி ஸ்தல் திடலில் தகனம் செய்யப்பட்டது. அதன்பின்னர் அவரது அஸ்தி மாநிலம் முழுவதிலும் உள்ள பல்வேறு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டது.
இந்நிலையில், டெல்லியில் உள்ள புகழ்பெற்ற ராம்லீலா மைதானத்திற்கு வாஜ்பாய் பெயரை சூட்டுவதற்கு வடக்கு டெல்லி மாநகராட்சி முடிவு செய்துள்ளது. வரும் மாநகராட்சி கூட்டத் தொடரில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
இதுபற்றி வடக்கு டெல்லி மாநகராட்சி மேயர் ஆர்தர் குப்தா கூறுகையில், “ராம்லீலா மைதானம் வரலாற்று சிறப்பு மிக்கது. இந்த மைதானத்தில் நடைபெற்ற பல்வேறு பொதுக்கூட்டங்களில் வாஜ்பாய் உரையாற்றியிருக்கிறார். அதனால் அவரது நினைவாக மைதானத்தின் பெயரை அடல் பிகாரி வாஜ்பாய் ராம்லீலா மைதானம் என மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர மாநகராட்சி மருத்துவமனைக்கும் அவரது பெயர் சூட்டப்படும். வரும் 30-ம் தேதி இது தொடர்பாக மாநகராட்சியில் தீர்மானம் கொண்டு வரப்படும்” என்றார்.