கூட்டுறவு சங்க தேர்தல் வேட்பு மனு தாக்கல்: அதிகாரிகள் வராததை கண்டித்து அரசியல் கட்சியினர் போராட்டம்

சிங்களாந்தபுரத்தில் கூட்டுறவு சங்க தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்ய அதிகாரி வராததை கண்டித்து அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
கூட்டுறவு சங்க தேர்தல் வேட்பு மனு தாக்கல்: அதிகாரிகள் வராததை கண்டித்து அரசியல் கட்சியினர் போராட்டம்
Published on

திருச்சி:

திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் உள்ள சிங்களாந்தபுரம், கோட்டாத்தூர் ,புலிவலம், நாகலாபுரம் , சிக்கதம்பூர், முத்தையம்பாளையம், துறையூர் அர்பன் கூட்டுறவு வங்கி ஆகிய கூட்டுறவு வங்கிகளில் தேர்தல் நடத்த வேட்பு மனு வழங்கப்பட இருந்தது. ஆனால் அந்த வங்கிகளில் தேர்தல் நடத்தும் அலுவலர் யாரும் வரவில்லை. இதனால் காத்து கிடந்த தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சியினர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் வங்கிகளை முற்றுகையிட்டனர்.

தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின்குமார், மாவட்ட பொருளாளர் தர்மன் ராசேந்திரன் , நகர செயலாளர் முரளி, ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். புலிவலத்தில் முசிறி ஒன்றிய செயலாளர் காட்டுகுளம் கணேசன், மார்க்சிஸ்ட் கட்சி ஒன்றிய குழு உறுப்பினர் வீராசாமி, டிடிவி. தினகரன் அணி சார்பில் மாவட்ட செயலாளர் ராஜசேகர், பீரங்கி சுப்ரமணியன், மோகன்தாஸ் ஆகியோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சிங்களாந்தபுரத்தில் உள்ள கூட்டுறவு வங்கியில் தேர்தல் அதிகாரி வராததை கண்டித்து தி.மு.க.வினர் பசு மாட்டிடம் மனு கொடுத்தனர்.

தா.பேட்டை அடுத்த பாப்பாபட்டி கிராமத்தில் அமைந்துள்ள பூலாஞ்சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்வதற்காக தேர்தலில் போட்டியிட நேற்று வேட்பு மனுதாக்கல் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து முன்னாள் ஊராட்சி தலைவர் அசோக் குமார், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பெரியசாமி மற்றும் தி.மு.க. மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, தேமுதிக. உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் வேட்பு மனுவை பெறுவதற்காக வந்திருந்தனர். ஆனால் காலையிலிருந்து கூட்டுறவு சங்க தேர்தலுக்கான அலுவலர் வரவில்லை. இதையடுத்து கட்சியினர் சேருகுடியிலிருந்து பவித்திரம் செல்லும் சாலையில் பாப்பாபட்டியில் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு முசிறி இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா மற்றும் போலீசார் சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் மறியலை கைவிடுமாறு சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் அதனை ஏற்க மறுத்து கட்சியினர் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

முசிறி கல்லூரி சாலையில் அமைந்துள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் வேட்பு மனு வழங்கிட அதிகாரிகள் யாரும் வரவில்லை. இதையடுத்து முசிறி ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் நகர செயலாளர் சிவக்குமார், நிர்வாகிகள் சப்தரிஷி, சரவணன் உள்ளிட்ட பலர் கூட்டுறவு சங்கத்தின் உள்ளே அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வாளவந்தி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் வேட்பு மனு வழங்க அதிகாரிகள் யாரும் வராத நிலையில் ஆத்திரமடைந்த நிர்வாகிகள் தி.மு.க. ஒன்றிய செயலாளர் கே.கே.ஆர்.சேகரன் தலைமையில் ஆட்டுக்குட்டியிடம் வேட்பு மனு கொடுக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே போல் அஞ்சலம் ஊராட்சியிலும் தேர்தல் அலுவலர்கள் வராததால் அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சிமாவட்டம் தொட்டியம் அருகே உள்ள திருநாராயணபுரத்தில் ஆர் 1618 வரதராஜபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகிறது. இதில் 4 ஆயிரத்து 79 உறுப்பினர்கள் உள்ளனர். இங்கு புதிய நிர்வாகிகள் தேர்தல் அறிவிக்கப்பட்டு நேற்று வேட்பு மனுக்கள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதிகாரி வராததால் அங்கு வந்திருந்த சங்க உறுப்பினர் ஏராளமானோர் செயலாளர் சிங்காரம், பணியாளர்கள் தங்கவேல்,மணிவேல், ஆராயி ஆகிய 4 பேரையும் அலுவலகத்தின் உள்ளே வைத்து பூட்டினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவ்வழியே வந்த அரசு டவுன் பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அலுவலகத்தின் முன் தரையில் அமர்ந்து தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என கோ‌ஷங்கள் எழுப்பினர்.

இதே போல் ஆர் 1619 தோளூர்பட்டி தொடக்க வேளாண்மை கடன் சங்கத்திலும், வேட்பு மனு பெற அதிகாரிகள் வராததால் அங்கு கூடியிருந்த உறுப்பினர்கள் சங்க அலுவலகத்தை மாலை வரை முற்றுகையிட்டனர்.

ஓய்.எம்.34 நாகைய நல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திலும் வேட்பு மனுக்கள் வழங்க அதிகாரிகள் வராததால் ஆணைக்கல்பட்டி பஸ் நிறுத்தத்தில் சங்க உறுப்பினர்களும் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும் பஸ் மறியலில் ஈடுபட்டனர். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com