

நியூ யார்க்:
சர்வதேச மொபைல் போன் சந்தையில் பல்வேறு சாதனைகளை புரிந்த நோக்கியா நிறுவனம் பல்வேறு காரணங்களால் ஸ்மார்ட்போன் சந்தையில் சோபிக்க முடியாமல் போனது. சர்வதேச சந்தையில் சிறிய இடைவெளிக்கு பின் நோக்கியா மீண்டும் கால்பதித்துள்ளது.
எச்எம்டி குளோபல் நிறுவனத்தின் மூலம் ரீ-எண்ட்ரியாகியுள்ள நோக்கியா பிரான்டு கடந்த சில மாதங்களில் பீச்சர்போன் மற்றும் சில ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ளது. முதற்கட்டமாக நோக்கியா 3310 பீச்சர்போன், நோக்கியா 3, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 ஸ்மார்ட்போன்கள் வெளியிடப்பட்டன. இதைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக நோக்கியா 8 அறிமுகம் செய்யப்பட்டது.
இந்தியாவில் நோக்கியா 8 தவிர மற்ற நோக்கியா போன்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், நோக்கியாவின் குறைந்த விலை ஸ்மார்ட்போனான நோக்கியா 3 சமீபத்தில் டியூரபிலிட்டி டெஸ்ட் செய்யப்பட்டது. பிரபல யூடியூப் தளம் செய்த டியூரபிலிட்டி டெஸ்டிங்கில் நோக்கியா 3 பழைய நோக்கியா பெயரை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
பிளாஸ்டிக் மற்றும் மெட்டல் மூலம் உருவாகியுள்ள நோக்கியா 3 அதிக உறுதித் தன்மை கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. முன்பக்க டிஸ்ப்ளே கொரில்லா கிளாஸ் மூலம் பாதுகாக்கப்பட்டிருப்பதால் முன்பக்கம் லெவல் 6 வரை அதிக சேதத்தை ஏற்படுத்தவில்லை. இதே பாதுகாப்பு முன்பக்கம் செல்ஃபி கேமரா, நோக்கியா லோகோ மற்றும் முன்பக்க பட்டன்களிலும் வழங்கப்பட்டுள்ளது.
பின்புறம் பிளாஸ்டிக் என்பதால் கேமரா, பிளாஷ் மற்றும் பேனல் உள்ளிட்டவை டியூரபிலிட்டி டெஸ்டில் சோபிக்கவில்லை. எனினும் நோக்கியா 3 தோற்றத்தை அழகாக வெளிப்படுத்தும் மெட்டல் பயன்பாடு போனின் உறுதி தன்மையை காப்பாற்றியிருக்கிறது. பவர், வால்யூம் பட்டன்கள், சிம் கார்டு மற்றும் மெமரி ஸ்லாட் உள்ளிட்டவையும் மெட்டல் மூலம் பாதுகாக்கப்பட்டுள்ளது.
இறுதியாக மேற்கொள்ளப்பட்ட வளைக்கும் சோதனையில் நோக்கியா 3 வெற்றி பெற்றுள்ளது. பட்ஜெட் விலையில் கிடைக்கும் நோக்கியா 3 ஒட்டுமொத்த சோதனையில் பின்புற பேனல் தவிர மற்ற அம்சங்களில் குறிப்பிடத்தக்க திறன் கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.
நோக்கியா 3 டியூரபிலிட்டி டெஸ்ட் வீடியோவினை கீழே காணலாம்..,