

சென்னை:
ஐகோர்ட்டில் டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல் மெரினா கடற்கரையில், எம்.ஜி.ஆர். அண்ணா, சமாதிகளுக்கு அருகே அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
குற்ற வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதாவுக்கு அரசு செலவில், நினைவிடம் அங்கு கட்டப்பட உள்ளது. இதற்கு தடை விதிக்க வேண்டும்.
கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளை மீறி, கடற்கரையோரம் ஜெயலலிதாவின் சமாதி அமைக்கப்பட்டுள்ளது. அந்த சமாதியை அங்கிருந்து அப்புறப்படுத்த உத்தரவிட வேண்டும்.’
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, இந்த மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
அதில், ‘கடலோர ஒழுங்கு முறை விதிகள் உருவாக்குவதற்கு முன்பே, அண்ணா, எம்.ஜி.ஆர். சமாதிகள் மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டு விட்டது. இந்த விதிகளை மீறி ஜெயலலிதாவின் சமாதி அமைக்கப்படவில்லை.
கடற்கரையோரம், சாலைகளுக்கு மிக அருகே சமாதியை கட்டியுள்ளது கடலோர ஒழுங்குமுறை விதிகளுக்கு எதிரானது அல்ல. இந்த சமாதிகளை அகற்ற முடியாது.
எனவே, டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று பிற்பகல் அல்லது நாளை விசாரணைக்கு வர உள்ளது. #tamilnews