தெலுங்கானா பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக் 22வது நாளாக நீடிப்பு- பயணிகள் அவதி

தெலுங்கானா பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் 22வது நாளாக நீடித்து வருவதால், பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
பணிமனையில் நிறுத்தப்பட்டுள்ள பேருந்துகள்
பணிமனையில் நிறுத்தப்பட்டுள்ள பேருந்துகள்
Published on

ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலத்தில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் சம்பள உயர்வு, போக்குவரத்து கழகத்தை அரசுடன் இணைத்து தங்களை அரசு ஊழியர்களாக ஆக்க வேண்டும், ஓய்வு ஊதியத்தை உயர்த்த வேண்டும் உள்பட 26 கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 5-ந்தேதி வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் காலக்கெடு விதித்து எச்சரிக்கை விடுத்தார். இந்த காலக்கெடுபுக்குள் பணிக்கு திரும்பாத 48 ஆயிரம் பஸ் ஊழியர்களை தாங்களாகவே பதவி விலகியதாக அரசு எடுத்துக்கொள்ளும் என முதல்வர் சந்திரசேகர ராவ் அதிரடியாக அறிவித்தார். எனினும் ஊழியர்கள் பணிக்கு திரும்பாமல் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்காலிக ஊழியர்கள், மாற்று நபர்களை வைத்து அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதையடுத்து பஸ் ஊழியர்களின் போராட்டம் மேலும் தீவிரம் அடைந்துள்ளது. தினமும் பணிமனை முன்பு போராட்டம், மறியல், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் 2 ஊழியர்கள் தற்கொலை செய்து கொண்டனர். பஸ் ஊழியர்களின் போராட்டம் இன்று 22வது நாளாக நீடிக்கிறது. பெரும்பாலான பஸ்கள் இயக்கப்படாமல் டெப்போக்களில் நிறுத்தப்பட்டிருப்பதால் பயணிகள் தொடர்ந்து பாதிப்படைந்துள்ளனர்.

அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகம், வேலைநிறுத்த போராட்டத்திற்கு தலைமை தாங்கும் அரசு போக்குவரத்துக் கழக கூட்டு நடவடிக்கைக் குழுவின் தலைவர்களை இன்று  பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. 

இதற்கிடையே, போராட்டம் நடத்தும் பஸ் ஊழியர்களுக்கு ஆதரவாக, இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் சாம்பசிவ ராவ் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளார். 

X

Maalai Malar
www.maalaimalar.com