அர்னாப் கோஸ்வாமி ஜாமீன் மனு விசாரணை - ஐகோர்ட்டில் இன்று மீண்டும் நடக்கிறது

மும்பை ஐகோர்ட்டில் அர்னாப் கோஸ்வாமி ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று மீண்டும் நடக்க உள்ளது.
அர்னாப் கோஸ்வாமி
அர்னாப் கோஸ்வாமி
Published on

மும்பை:

ராய்காட் மாவட்டம் அலிபாக்கை சேர்ந்தவா் கட்டிட உள்வடிவமைப்பாளர் அன்வய் நாயக் (53). இவருக்கு கட்டிட உள்வடிவமைப்பு பணிகள் செய்ததற்கான நிலுவை தொகையை ரிபப்ளிக் டி.வி. ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி (47), வழங்காமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, கடந்த 2018-ம் ஆண்டு அன்வய் நாயக் அலிபாக்கில் உள்ள வீட்டில் தாயுடன் தற்கொலை செய்து கொண்டார். மூடப்பட்ட இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க போலீசாருக்கு மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் உத்தரவிட்டு இருந்தார்.

கடந்த புதன்கிழமை அதிகாலை அலிபாக் போலீசார் மும்பை லோயர் பரேலில் உள்ள அர்னாப் கோஸ்வாமியின் வீட்டுக்கு சென்று கட்டிட வடிவமைப்பாளர் மற்றும் அவரது தாயை தற்கொலைக்கு தூண்டியதாக, அவரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக பெரோஸ் சேக், நிதேஷ் சர்தா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

இதில் 3 பேரையும் வருகிற 18-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க அலிபாக் கோர்ட்டு உத்தரவிட்டது. அவர்கள் 3 பேரும் கொரோனாவை தொடர்ந்து அலிபாக்கில் உள்ள பள்ளிக்கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இதனிடையே, அர்னாப் கோஸ்வாமி ஜாமீன் கேட்டு மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் எஸ்.எஸ். ஷிண்டே, எம்.எஸ். கார்னிக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நடந்தது. அப்போது நீதிபதிகள், அர்னாப் கோஸ்வாமி தரப்பு வக்கீல்களின் வாதங்களைக் கேட்டறிந்தனர். பின்னர் அவர்கள், “நாளை (இன்று) மதியம் இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு அமர்வாக நாம் கூட உள்ளோம்” எனக்கூறி விசாரணையை ஒத்தி வைத்தனர்.

அர்னாப் கோஸ்வாமி ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று மதியம் 12 மணியளவில் நடைபெற உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com