லாஸ் வேகாஸ் துப்பாக்கிச்சூடு: தீவிரவாத இயக்கங்களுக்கு தொடர்பு இல்லை - எப்.பி.ஐ

உலகையே அதிரவைத்த லாஸ் வேகாஸ் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஈடுபட்ட நபருக்கு சர்வதேச தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்புகள் எதுவும் இல்லை என அமெரிக்க புலணாய்வு அமைப்பான எப்.பி.ஐ கூறியுள்ளது.
லாஸ் வேகாஸ் துப்பாக்கிச்சூடு: தீவிரவாத இயக்கங்களுக்கு தொடர்பு இல்லை - எப்.பி.ஐ
Published on

உலகையே அதிரவைத்த லாஸ் வேகாஸ் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஈடுபட்ட நபருக்கு சர்வதேச தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்புகள் எதுவும் இல்லை என அமெரிக்க புலணாய்வு அமைப்பான எப்.பி.ஐ கூறியுள்ளது.

அமெரிக்காவின் நிவேடா மாநிலத்தில் சூதாட்டம், விபசாரம், ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் உள்ளிட்ட கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு பேர்போன லாஸ் வேகாஸ் நகரில் உள்ள கிராமிய திருவிழா மற்றும் சுற்றுலா திடலில் மூன்றுநாள் கிராமிய இசைவிழா நடைபெற்று வந்தது.

இசை விழாவின் மூன்றாவது கடைசிநாளான நேற்றிரவு இசை நிகழ்ச்சியை காண 20 ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்கள் திரண்டிருந்தனர். அப்போது, அருகாமையில் உள்ள மண்டலே பே என்ற சொகுசு ஓட்டலின் 32-வது மாடியில் நின்றவாறு இசை நிகழ்ச்சி நடைபெற்ற திடலை நோக்கி ஒரு மர்மநபர் சரமாரியாக துப்பாக்கிகளால் சுட்டான்.

சுமார் பத்து துப்பாக்கிகளை பயன்படுத்தி மாறிமாறி அவன் நடத்திய தாக்குதலில் இசை நிகழ்ச்சியை ஆர்வத்துடன் ரசித்து கொண்டிருந்தவர்களின் உடல்களில் தோட்டாக்கள் துளைத்தன. ரத்தம் வழிந்தவாறு கூச்சலிட்டபடி அவர்கள் மூலைக்கு ஒருவராக ஓடினர்.

சுமார் பதினைந்து நிமிடம் நீடித்த இந்த துப்பாக்கிச் சூட்டில் எதிரி எங்கிருந்து சுடுகிறான்? என்பதை கண்டுபிடிக்க முடியாமல் திணறிய போலீசார், இறுதியாக மண்டலே பே ஓட்டலை அடையாளம் கண்டு அங்கு விரைந்து சென்றனர். 32-வது மாடிக்கு அவர்கள் சென்றடைவதற்கு முன்னர் இந்த தாக்குதலை நடத்தியவன் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுகொண்டு உயிரிழந்தான்.

இந்த கொடூர தாக்குதலில் 58 பேர் தற்போது வரை பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 500-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அரசுத்தரப்பு கூறியுள்ளது. 

இதற்கிடையே, இந்த தாக்குதலை தங்களது இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதி நடத்தியதாக ஐ.எஸ் இயக்கம் தன்னுடைய ஊடகமான அமான் மூலம் தெரிவித்திருந்தது. ஆனால், அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ, தாக்குதல் நடத்திய நபருக்கு சர்வதேச தீவிரவாத இயக்கங்களுடன் எந்த தொடர்பும் இல்லை என கூறியுள்ளது.

ஸ்டீபன் பட்டாக் என்பவர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாகவும், 64 வயதான அவர் கணக்காளராக இருந்து ஓய்வு பெற்றவர் என்றும் எப்.பி.ஐ தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com