

இதுகுறித்து வருகிற 7-ந்தேதி நடைபெறும் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படுகிறது. இதில் உறுப்பினர்கள் அனைவரும் இந்தியா சாம்பியன்ஸ் தொடரில் இருந்து வெளியேற வேண்டும் என்று கூறினாலும், தங்கள் அனுமதியில்லாமல் பி.சி.சி.ஐ. அதிகாரிகளால் எந்த முடிவையும் எடுக்க முடியாது என நிர்வாகிகள் குழு தெளிவுபடுத்தி உள்ளது.
இதுகுறித்து நிர்வாகிகள் குழுவின் தலைவர் வினோத் ராய் கூறுகையில் ‘‘ஐ.சி.சி.யின் புதிய வருவாய் முறையை ஏற்றுக் கொள்வதா? என்பதை சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் விவாதித்த பிறகுதான் கூறுவோம் என்று ஐ.சி.சி.யிடம் தெளிவாக கூறிவிட்டோம். அதேபோல் எங்களது அனுமதி இல்லாமல், சாம்பியன்ஸ் டிராபி தொடர்பாக பிசிசிஐ அதிகாரிகள் ஐ.சி.சி.க்கு எந்த நோட்டீசும் அனுப்பக்கூடாது என்பதையும் தெள்ளத்தெளிவாக எடுத்துக் கூறியுள்ளோம்” என்றார்.
முன்னாள் பிசிசிஐ தலைவர் ஸ்ரீனிவாசன் தலைமையிலான சுமார் 10 உறுப்பினர்கள் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து இந்தியா விலக வேண்டும், ஐ.சி.சி.க்கு எதிரான சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்த இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறதே? என்று கேட்டதற்கு ‘‘இதுகுறித்த செய்தி எனது கவனத்திற்கு வந்தது. இதுபோன்ற முடிவை நாம் விரைந்து எடுக்க முடியாது. சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து நாம் விலகினால், அதன்பிறகு 8 ஆண்டுகளுக்கு ஐ.சி.சி. நடத்தும் தொடரில் பங்கேற்க இயலாது. இதை சில உறுப்பினர்கள் முடிவு செய்ய முடியாது.
30 உறுப்பினர்களில் சிலர் ஐ.சி.சி.க்கு எதிராக இருக்கலாம். சிலர் ஆதரவாக இருக்கலாம். என்னிடம் இதுகுறித்து கேட்டால், 30 உறுப்பினர்களும் இந்தியா சாம்பியன்ஸ் தொடரில் இருந்து விலக வேண்டும் என்று முடிவு செய்தால், அதன்பின் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அப்படி இந்தியா சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து வெளியேற வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டால், நிர்வாகிகள் குழு சுப்ரீம் கோர்ட்டிடம் இருந்து அதற்கான உத்தரவை பெற வேண்டும்’’ என்றார்.
இந்தியா ஜூன் 1-ந்தேதி இங்கிலாந்தில் தொடங்கும் சாம்பியன்ஸ் கிரிக்கெட் தொடரில் பங்கேற்குமா? என்பது வரும் 7-ந்தேதி தெரியவரும்.