நித்திரவிளையில் மீனவர் வீட்டில் 23 பவுன் நகை-பணம் கொள்ளை

நித்திரவிளையில் மீனவர் வீட்டில் 23 பவுன் நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
வீடு புகுந்து கொள்ளை
வீடு புகுந்து கொள்ளை
Published on

கொல்லங்கோடு:

நித்திரவிளை அருகே இரவிபுத்தன்துறை பகுதியை சேர்ந்தவர் ததேயூஸ் (வயது 45), மீனவர். இவருக்கு சோபனா என்ற மனைவியும் 3 பிள்ளைகளும் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு கடற்சீற்றம் அதிகமாக இருந்தது. இதனால் ததேயூஸ் தனது வீட்டை பூட்டி விட்டு, மனைவி, பிள்ளைகளுடன் உறவினர் வீட்டுக்கு சென்று இரவு தங்கினார்.

ததேயூஸ் காலையில் எழுந்ததும் தனது வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றார். அப்போது வீட்டின் பின்புறம் உள்ள கதவு திறந்து கிடந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் படுக்கை அறைக்கு சென்று பார்த்தார். அப்போது, அங்கு பீரோக்கள் திறந்த கிடந்தன. அதில் இருந்த துணிகள் மற்றும் பொருட்கள் அனைத்தும் கீழே சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் வைத்திருந்த 23 பவுன் நகை மற்றும் ரூ.35 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை. வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இதுபற்றி நித்திரவிளை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்த்தனர். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அந்த நாய் வீட்டை சுற்றி வந்து விட்டு வெளியே சிறிது தூரம் ஓடியது. மேலும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ரேகைகளை பதிவு செய்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com