கன்னியாகுமரி அருகே நிலைகொண்டிருந்த ‘ஒக்கி’ புயல் காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த மாத இறுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
கொட்டித்தீர்த்த மழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன.
கன்னியாகுமரியில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் நேரில் சென்று ஆய்வு செய்தார். புயலினால் பாதிப்படைந்த மீனவர்கள், விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்வதற்காக மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கன்னியாகுமரிக்கு வருகை தந்துள்ளார். கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில், துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் கடலோர காவல் படை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.