

குன்னூர்:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகலில் வெயிலும், மாலை நேரங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது.
குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் 3 நாட்களாக பகல் நேரங்களில் சாரல் மழை பெய்து வந்தது. நேற்று குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மதியம் 1 மணிக்கு பலத்த இடியுடன் மழை பெய்தது. இரவு 7 மணி வரை தொடர்ந்து 6 மணி நேரம் விடாமல் மழை பெய்தது.
இதன் காரணமாக முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடியது. மேலும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் வெப்பம் தணிந்து இதமான குளிர்ச்சி நிலவி வருகிறது. குன்னூர் சுற்றுப்புற பகுதிகளான பர்லியார், அருவங்காடு உள்பட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இந்த மழைக்கு டால்பின்நோஸ் சாலையில் உள்ள 3 ராட்சத மரங்கள் முறிந்து விழுந்தன.
கோத்தகிரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளான கோடநாடு, சோலூர் மட்டம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஒடியது.
இதேபோல் ஊட்டியிலும் நேற்று மதியம் முதல் மாலை வரை பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் முக்கிய சாலைகளான சேரிங்கிராஸ், தாவரவியல் பூங்கா செல்லும், ரோஜா பூங்கா செல்லும் சாலை, தொட்டபெட்டா சாலை உள்ளிட்ட அனைத்து சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அத்தியாவசிய பொருட்கள் வாங்க பொதுமக்கள் மழையில் நனையாமல் இருக்க குடை பிடித்தபடி மார்க்கெட்டுக்கு வந்தனர். மேலும் திறந்த வெளியில் சந்தையில் மழைநீர் தேங்கி நின்றதால் வியாபாரிகள் அவதி அடைந்தனர்.
மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. கீழ்குந்தா, கரியமலை, குந்தா பாலம், எடக்காடு, காந்திதி கண்டி, பாலகொலா உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதேபோல் பந்தலூர், எருமாடு, கொளப்பள்ளி, தாளூர் உள்ளிட்ட பகுதியில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் அடிக்கடி மின்தடை ஏற்பட்டது. தொடர் மழையால் தாளூரில் உள்ள ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பல இடங்களில் சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் மரங்கள் முறிந்து விழுந்தன.
திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை பலத்த சூறாவளி காற்று மற்றும் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.
குடிமங்கலம் பகுதியில் பெய்த பலத்த மழைக்கு சின்னத்துரை என்பவர் 4 ஏக்கர் பரப்பில் பயிரிட்டிருந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பப்பாளி மரங்கள் முறிந்து விழுந்து சேதம் அடைந்தன. இதன் மதிப்பு ரூ.40 லட்சம். இதேபோல் செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான 1000 வாழைகளும் சேதம் அடைந்தன.